தமிழ்நாடு

”நெல்லை பள்ளி விபத்துக்கு நிர்வாக அஜாக்கிரதையே காரணம்”- அமைச்சர் அன்பில் மகேஷ்

”நெல்லை பள்ளி விபத்துக்கு நிர்வாக அஜாக்கிரதையே காரணம்”- அமைச்சர் அன்பில் மகேஷ்

நிவேதா ஜெகராஜா

பள்ளிக் கட்டிடங்களின் தரம் குறைந்திருக்கும் நிலைகுறித்து விளக்கம் அளிக்க, தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்திருந்தார்.

அப்போது பேசிய அவர், “தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளின் கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்தும் விரைந்து ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டமாக அரசு தரப்பிலும் நாங்கள் நேராக சென்று ஆய்வு செய்யவுள்ளோம். சி.இ.ஒ-க்களுக்கும் இதுகுறித்து அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைக்கு முதற்கட்டமாக சில மாவட்டங்களில் கட்டிடங்கள் மோசமாக இருப்பது தெரியவந்துள்ளதால், அங்கு அக்கட்டிடங்களை இடிக்க இன்று உத்தரவிடப்பட்டுள்ளது. இடிக்கப்படும் பள்ளிக்கட்டடங்களுக்கு பதில், மாற்று கட்டடங்களில் வகுப்புகள் செயல்பட ஏற்பாடு செய்துள்ளோம். அந்த மாணவர்களுக்கு எந்த வகையிலும் படிப்பு தடைபடாது.

நேற்று நெல்லையில் ஏற்பட்ட பள்ளி சுவர் இடிந்த விழுந்ததற்கு, பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையே காரணம். தற்போதைக்கு அங்கு படிக்கும் மாணவர்களுக்கு, வேறொரு பள்ளி வளாகத்தில் பாடம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தயவுசெய்து ‘விபத்து நடந்து இழப்பு வந்தபிறகு தான் நடவடிக்கை எடுப்பீர்களா’ என நினைக்க வேண்டாம். கடந்த மாதங்களில் இதுகுறித்தும் ஆய்வு செய்துவந்தோம். இருப்பினும் டிசம்பரில்தான் அனைத்தும் முடிவடையும் நிலை உள்ளது. தற்போது எங்கள் பணியை அதிவேகமாக துரிதப்படுத்தியுள்ளோம். அனைத்து மாவட்டங்களிலும், கிராம அளவில் - ஒன்றிய அளவில் ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வு செய்ய ஆய்வுக்குழுக்கள் அமைக்க வேண்டுமென, அனைத்து மாவட்டங்களின் நிர்வாகங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிகத்தீவிரமாக இதுகுறித்து ஆய்வு செய்யப்படும். உடனடியாக அனைத்தும் சரிசெய்யப்படும்.

பள்ளிகள் கட்டடங்கள் மட்டுமன்றி போக்குவரத்து வாகனங்கள் மீதான தரப்பரிசோதனையும் ஆய்வும் எங்களின் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே பள்ளிகள் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடமாக இருக்க, அனைத்து வகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்றார்.