பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தொடர்ந்திருந்தார். அதன் மீதான உத்தரவில், ‘செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவனைக்கு மாற்ற அனுமதி வழங்கப்படுகிறது. அமலாக்கத்துறை தனியாக மருத்துவ குழு ஒன்றை ஏற்படுத்தி, அவரது உடல்நிலையை காவேரி மருத்துவமனையில் பரிசோதிக்கலாம்’ என்று கூறிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், இவ்வழக்கை 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அதேபோல் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது தொடர்பான வழக்கை விசாரிக்கும் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. ஆனால் உயர்நீதிமன்றம் 8 நாட்கள் அவகாசம் வழங்கியதுடன், அமைச்சர் செந்தில் பாலாஜியை மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்து செல்ல கூடாது என்றும் உத்தரவிட்டது.
இதற்கிடையில் அமலாக்கத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த், ‘கோடைகால அமர்வு என்பதால், அவசர வழக்காக எடுத்து விசாரிக்க முடியாது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஆலோசனை பெற்று, ஓரிரு நாளில் மேல் முறையீட்டு மனு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும்’ என்று கூறினார். இதற்கிடையே செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய கோடைகால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது வாதங்களை முன்வைத்த அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், “செந்தில் பாலாஜியை காவல் எடுக்கும்போது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணானது” என வாதிட்டார். அதற்கு நீதிபதிகள், “சென்னை உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு மனு மீது உத்தரவு பிறப்பித்தது உரிய காரணத்தின் அடிப்படையில் தானே? பல்வேறு உத்தரவுகளை மேற்கோள் காட்டினாலும், உயர்நீதிமன்றம் தனது கருத்தை வெளிப்படுத்துவதில் என்ன தவறு உள்ளது? ஒருவேளை உயர்நீதிமன்றம் தவறாக கையாண்டிருந்தால், இந்த நீதிமன்றம் அதனை அரசியல் சாசன விதி படி ரத்து செய்யும்” என தெரிவித்தனர்.
மேலும், “உயர்நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டுதான் முடிவு எடுத்ததாகக் கருதுகிறோம். உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பித்தானே விசாரணை நடத்தியுள்ளது. தற்போதைய நிலையில் உயர்நீதிமன்றத்தை சந்தேகிக்க முடியாது. ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்போது அவரை காவலில் எடுக்க முடியுமா? அவரது உடல்நிலை சரியில்லை என மருத்துவ குழு சான்றளித்த பின்னர், அவரை காவலில் கொடுக்க வேண்டும் என கோருகிறீர்களா? அவர் சிகிச்சை முடிந்த பின்னர் விசாரணை நடத்தலாமே” என்று கருத்தை தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல், “இந்த வழக்கு பிற குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கும். எனவே இந்த ஆட்கொணர்வு மனு விசாரணை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் தவறாக நடந்துள்ளது. இந்த வழக்கு மிகவும் தீவிரமானது. எனவேதான் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை வேண்டும். தற்போதைய உயர்நீதிமன்ற உத்தரவால் குற்றம்சாட்டப்பட்டவரை காவலில் எடுக்க முடியவில்லை” என்று வாதிட்டார். இதற்கு நீதிபதிகள், “செந்தில் பாலாஜியை தீவிர பரிசோதனை செய்த பின்னரே நிபுணர்கள் கருத்து அடிப்படையில் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்பதை உயர்நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளதே; மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருக்கும் ஒருவரை முழுமையாக காவலில் எடுத்து விசாரிக்க கோரியதை நிராகரித்த விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது அதிருப்தி அளிக்கிறது.
மருத்துவர்கள் தீவிரமாக ஆராய்ந்துதான் தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர். உயர்நீதிமன்றம் அனைத்து அதிகாரங்களும் கொண்டது. விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்க முடியும். தேவைப்பட்டால் மீண்டும் ஒரு மருத்துவைக் குழுவை அமைத்து ஆராயலாமே. இந்த விஷயத்தில் உயர்நீதிமன்றம் என்ன உத்தரவுகளை பிறப்பிக்கிறது என்பதைப் பார்த்த பின்னர் உச்சநீதிமன்றம் விசாரிக்க தயாராக உள்ளது” என தெரிவித்தனர்.
வாதத்தின்போது, செந்தில் பாலாஜியின் மருத்துவ சிகிச்சையே கேள்வியாக உள்ளது என்றும், விசாரணையை தாமதப்படுத்த இதுபோன்ற செயல்பாடுகளை செய்துள்ளார் எனவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதற்கு, செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதில், “தன் உடலில் உள்ள மருத்துவ பிரச்னையை குறிப்பாக 4 பிளாக்குகளை எவ்வாறு போலியாக காட்ட முடியும்? எனவே அமலாக்கத்துறை தவறான வாதங்களை முன்வைக்கிறது. மருத்துவ சிகிச்சையில் உள்ள ஒருவர் குறித்து போலியான குற்றச்சாட்டுகளை சொலிசிட்டர் முன்வைத்து வருகிறார்” என செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “உயர்நீதிமன்றம் ஆட்கொணர்வு மனு மீது தனது இறுதி உத்தரவை 22 ஆம் தேதி பிறப்பிக்க உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை பார்த்து பின்னர் உச்சநீதிமன்றம் விசாரிக்கும். அதேவேளையில் இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மெரிட் அடிப்படையில் விசாரிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் மெரிட் அடிப்படையில் விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேவேளையில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கை கருத்தில் கொண்டு வழக்கை ஒத்திவைக்க கூடாது” என்று உத்தரவுப்பிறப்பித்து வழக்கு ஜூலை 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.