தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு - உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு - உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு

webteam

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான ஆவணங்களை விசாரணை நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டாம் என்ற உத்தரவு பிறப்பித்துள்ள உச்சநீதிமன்றம், வழக்கை அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.

தமிழக மின்சாரத் துறை அமைச்சரான செந்தில் பாலாஜி, கடந்த 2011 முதல் 2015-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது அத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதனடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளைப் பதிவு செய்தனர். இந்த மூன்று புகார்களின் அடிப்படையில் நான்கு வழக்குகள் சென்னை எம்.பி .- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

தன் மீதான வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். அதேவேளையில், அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததால், அவரை வழக்கில் இருந்து விடுவிக்க கூடாது எனவும், தங்களையும் வழக்கில் இணைத்து விசாரிக்கக் கோரி அமலாக்கதுறை சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது.

இதபோல் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கூடாது, மேலும் உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கூடுதலாக வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். இந்த அனைத்து மனுக்களையும் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்தது.

அதேபோல் வழக்கில் தங்களையும் இணைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்ற அமலாக்கதுறை மனுவையும் தள்ளுபடி செய்தது. அதேவேளையில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார், நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கை மீது மீண்டும் முதலில் இருந்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

ஆனால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிந்து விசாரணை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என்றும், செந்தில் பாலாஜிக்கு எதிரான புகார்களை மீண்டும் புதிதாக தொடக்கத்தில் இருந்து விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்ட பாலாஜி என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தபோது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன், “இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவின்படி ஊழல் தடுப்பு சட்டப்பிரிவில் வழக்கு பதியப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கீழமை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன. தற்போதைய நிலையில் இந்த வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைப்பதாக இருந்தால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது ஆவணங்ளை கீழமை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க தடை விதிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தார்

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை வரும் புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டதுடன், அதுவரை செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பான ஆவணங்களை விசாரணை நீதிமன்றத்துக்கு வழங்க வேண்டாம் என்ற உத்தரவு பிறப்பித்தனர்.