உச்சநீதிமன்றம் pt web
தமிழ்நாடு

“ஆளுநர் - முதல்வர் சந்திப்பு நிகழ வேண்டும்” - பல்வேறு அறிவுரைகளை வழங்கிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி!

மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Angeshwar G

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதி அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. குடியரசுத் தலைவருக்கு அவசரமாக மசோதாக்களை ஆளுநர் அனுப்பியது ஏன்? என தமிழ்நாடு அரசு கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதில் அளித்திருந்த தலைமை நீதிபதி, இப்படி செல்வது சரியாக இருக்காது. ஆளுநரும் முதல்வரும் சேர்ந்து பேசி இதற்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையில் சட்ட ரீதியான செயல்பாடுகளை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போடுவதோ அல்லது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவதோ சட்டத்திற்கு உட்பட்டுத்தான் இத்தகைய செயல்பாடுகள் இருக்கின்றதா என்ற கேள்வியை தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி சந்திரசூட், இது குடியரசுத் தலைவரிடம் சென்றுவிட்டதால், அவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டு நடவடிக்கை எடுக்குமாறு சோல்ல முடியாது. குடியரசுத் தலைவரிடம் மீண்டும் பெற்று ஆளுநரிடம் தரவும் முடியாது பொறுமையாக விசாரிக்கலாமா என தலைமை நீதிபதி கேட்டதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் சரியென்று தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம்

எனவே இந்த வழக்கு ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை ஜனவரி 3 ஆவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தலைமை நீதிபதி பல்வேறு விஷயங்களையும் அறிவுரைகளாக ஆளுநருக்கு வழங்கியுள்ளார். குறிப்பாக, அரசாங்கத்தின் செயல்பாடுகள் இந்த மாதிரியான ஒப்புதல் அளிக்கப்படாததன் காரணமாக தடைபட்டு நிற்கக்கூடாது. அரசியல் ரீதியாக பல்வேறு விஷயங்களை மாநில அரசு செய்வதற்கான தடைகளை போடக்கூடாது, விரைவில் ஆளுநர் முதல்வர் சந்திப்பு நிகழ வேண்டும் போன்ற விஷயங்களையும் அறிவுரைகளாக வழங்கியுள்ளார்.