CCTV Footage pt desk
தமிழ்நாடு

கைதாகி கொண்டு செல்லும் வழியில் விபத்தில் சிக்கிய சவுக்கு சங்கர்! அதிரவைக்கும் சிசிடிவி காட்சி!!

தேனியில் சவுக்கு சங்கரை கைது செய்து கோவைக்கு அழைத்துச் செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டது. தற்போது விபத்திற்கான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

webteam

காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில் கடந்த சனிக்கிழமை அன்று தேனியில் வைத்து கைது செய்யப்பட்டார் யூட்யூபர் சவுக்கு சங்கர். தொடர்ந்து, தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார், அவரை கோவைக்கு அழைத்துச் சென்றனர். பிணையில் வெளிவர முடியாத பிரிவுகள் உட்பட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Savukku shankar

அப்போது, கைது செய்த சவுக்கு சங்கரை தாராபுரம் வழியாக கோவை மத்திய சிறைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது, வாகனம் விபத்தில் சிக்கியது. சாலையின் நடுவே கார் ஒன்று கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த போலீஸ் வாகனம் எதிரே இருந்த கார் மீது மோதியது. இதில் கார் சுக்குநூறாக நசுங்கிய நிலையில், போலீஸ் வாகனத்தில் இருந்த சவுக்கு சங்கர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, தாராபுரம் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சவுக்கு சங்கர் மீண்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீஸ் அழித்துவிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த கடையின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Accident CCTV footage

சிகிச்சைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது. இதனால், அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், 5 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை நீதிமன்றத்தில், சைபர் காவல்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது. இது விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.