சவுக்கு சங்கர் pt web
தமிழ்நாடு

“அமைச்சர் உதயநிதியே காரணம்... அவரது உத்தரவில்தான் எல்லாம் நடக்கிறது” - சவுக்கு சங்கர்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு சிறைக்கு திரும்பும் போது, “அமைச்சர் உதயநிதி உத்தரவின் பேரில் என் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது” என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சவுக்கு சங்கர்.

PT WEB

செய்தியாளர் ரவி

பிரபல யூடிபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், நீலகிரி போலீசார் கோவையிலிருந்து சென்னைக்கு, அவரை வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக, சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக அழைத்து சென்றனர். அப்போது சவுக்கு சங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முன்னதாக ஊட்டி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் புகார் அளித்தன் பேரில், சவுக்கு சங்கரை சென்னையிலிருந்து 29-ந்தேதி, விசாரனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஊட்டி ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

இரவு நேரம் என்பதால் நேற்று இரவு அவினாசி கிளை சிறையில் சவுக்கு சங்கர் வைக்கப்பட்டு இருந்தார். பின்னர் காலை 7. 00 மணிக்கு அங்கிருந்து சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையில் 17 போலீஸார் பாதுகாப்பில் அழைத்துச் செல்லப்பட்டார். பயணத்தின் போது, சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே திடீரென வயிற்று வலி எனக் கூறி வேனில் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவர் மதியம் 12.30 மணியளவில், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்த நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு சவுக்கு சங்கருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது

இதையறிந்த செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற போது, பாதுகாப்பு பணியில் இருந்த நீலகிரி போலீசார் அனுமதி மறுத்தனர். அதுமட்டுமின்றி, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த பொது மக்களை அங்கிருந்து வெளியேற்றியதால் நீண்ட நேரம் மக்கள் வெளியில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது.

இரண்டு மணி நேர சிகிச்சைக்கு பின் மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தார். அப்போது வேனில் இருந்தபடியே “என் கைதுக்கு உதயநிதிதான் காரணம், உதயநிதி உத்தரவின்பேரில், என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கு போட்டு கைது செய்து வருகின்றனர்” என தெரிவித்தார்.