தமிழ்நாடு

சத்தியமங்கலம்: கிராமத்திற்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

சத்தியமங்கலம்: கிராமத்திற்குள் புகுந்து வாழை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

kaleelrahman

சத்தியமங்கலம் அருகே காட்டு யானைகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்வதால், நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை விளாமுண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய 3 காட்டு யானைகள் கீழ்பவானி வாய்க்காலை கடந்து தொட்டம்பாளையம் கிராமத்திற்குள் புகுந்தன. அப்பகுதியில் வசிக்கும் விவசாயி மாணிக்கம் என்பவரது விளைநிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி மற்றும் இரும்பு கேட்டை சேதப்படுத்திய காட்டு யானைகள் விவசாயி பன்னீர்செல்வம் என்பவரது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.

இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. காட்டு யானைகள் வாழைத் தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை கண்ட அப்பகுதி விவசாயிகள் பட்டாசுகள் வெடித்தும், சத்தம் போட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். காட்டு யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறாமல் தடுக்க ஏற்கெனவே வெட்டப்பட்டுள்ள அகழியை அகலம் மற்றும் ஆழப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.