தமிழ்நாடு

சத்தியமங்கலம்: ஆபத்தை உணராமல் அரசு பேருந்தின் ஏணியில் பயணம்!வைரலாகும் வீடியோ

சத்தியமங்கலம்: ஆபத்தை உணராமல் அரசு பேருந்தின் ஏணியில் பயணம்!வைரலாகும் வீடியோ

kaleelrahman

சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப் பகுதிக்குச் செல்லும் அரசு பேருந்தின் மேற்கூரை மற்றும் பின்பக்க ஏணியில் பொதுமக்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலராகி வருகிறது.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப் பகுதிக்கு அரசு பேருந்துகள் மற்றும் ஒரு தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் பேருந்து இயக்கப்படுவதால் ஒரு சில நாட்களில் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து கடம்பூர் மலைப்பகுதிக்கு செல்லும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பது வழக்கம்.

இந்நிலையில் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து கடம்பூர் மலைப் பகுதிக்கு செல்லும் அரசு பேருந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ஏறியதால் பேருந்தின் உள்ளே நிற்கக்கூட இடம் இல்லாத நிலையில் பயணிகள் பின்பக்க ஏணி வழியாக பேருந்தின் மேற்கூரையில் ஏறி பயணித்தனர். அப்போது ஒரு வாலிபர் பேருந்தின் பின்பக்க ஏணியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்ததை அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப் பகுதிக்குச் செல்லும் அரசு பேருந்து மேற்கூரை மற்றும் பின்பக்க ஏணியில் பொதுமக்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ வைரலாகி வருவது போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.