சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவர் மீது படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. அண்மையில் நடந்த வனவிலங்குகள் கண்கெடுப்பில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழகம் கர்நாடகத்தை இணைக்கும் திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசிகள் வளைவுகள் உள்ளன. இந்நிலையில், 24 மணி நேரமும் வாகனங்கள் பயணிக்கும் இந்த மலைப்பாதையில் அடிக்கடி சிறுத்தை, புலி உள்ளிட்ட விலங்குகள் கடந்து செல்வதுண்டு.
இந்நிலையில், நள்ளிரவில் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக தாளவாடி நோக்கி காரில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது திம்பம் மலைப்பாதையில் உள்ள 24வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது அங்குள்ள தடுப்பு சுவரில் சிறுத்தை கால்களை தொங்கவிட்டபடி அமர்ந்திருந்தது.
இதையடுத்து வாகன ஓட்டிகள் ஒலியெழுப்பியும் சிறுத்தை அதை பொருட்படுத்தாமல் மீண்டும் தடுப்பு சுவரில் படுத்துக் கொண்டது. இதை தனது செல்போனில் வாகன ஓட்டிகள் படம் பிடித்து சமூக வளைதலங்களில் பதிவிட்டுள்ளதால் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிறுத்தை இரவு நேரத்தில் வேட்டையாடி விட்டு சாப்பிட்ட களைப்பில் அந்த இடத்தில் படுத்திருக்கலாம் என்றும் வானக ஓட்டிகள் திம்பம் மலைபாதையில் இறங்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.