தமிழ்நாடு

`நான் என்ன உங்க வேலைக்காரனா?’- மாற்றுத்திறனாளியிடம் பேசியதற்கு சாத்தூர் எம்.எல்.ஏ விளக்கம்

`நான் என்ன உங்க வேலைக்காரனா?’- மாற்றுத்திறனாளியிடம் பேசியதற்கு சாத்தூர் எம்.எல்.ஏ விளக்கம்

நிவேதா ஜெகராஜா

அரசு உதவி கோரிய மாற்றுத்திறனாளிடம் `நான் உங்கள் வேலைக்காரன் கிடையாது. உங்களால் முடிந்தவற்றை பார்த்துக் கொள்ளுங்கள்’ என சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பேசியிருந்ததால் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பான செய்தி புதிய தலைமுறையில் வெளியாகியிருந்த நிலையில், தற்போது அதற்கு சாத்தூர் எம்.எல்.ஏ. தற்போது மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதி காயல்பட்டி பகுதியில் வசித்து வருபவர் திருமலை குமார். இவர், 60% வரை மாற்றுத்திறனாளியான பாண்டீஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஊறுகாய் வியாபாரம் செய்து வரும் திருமலை குமார், அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனத்திற்காக பல முறை விண்ணப்பித்துள்ளார். ஆனால் அது கிடைக்காமல் இருந்துள்ளது.

இதனால் கடந்த மாதம் காயில்பட்டி பகுதிக்கு சென்ற சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமனிடம், தனக்கு மூன்று சக்கர வழங்க வேண்டும் எனக் கூறி நேரடியாக மனு அளித்துள்ளார் திருமலை குமார். மனு கொடுத்து இருபது நாட்களுக்கு மேலாக ஆகிய நிலையில் சட்டமன்ற உறுப்பினரிடம் மாற்ற திறனாளி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

அப்போது அவர், “நான் உங்க வேலைக்காரன் கிடையாது. அதிகாரிகளெல்லாம் கூட சொன்னதும் செய்ய மாட்டாங்கள். இப்போவே பார்க்கணும் - அப்பவே பார்க்கணும் என்றெல்லாம் சொல்லிட்டிருந்தா விஷயம் நடக்காது. அவசரப்பட்டால் இங்கு எந்த வேலையும் நடக்காது. வேறு யாரையாவது வைத்து இந்த வேலையை பார்த்துக் கொள்ளுங்கள். நான் உங்க ஃபைல்-ஐ ஓரமா வைத்துவிடறேன்” என்று பேசியிருந்திருக்கிறார். அந்த ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F762473248304523%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

இது குறித்து மாற்றுத்திறனாளி திருமலை குமாரிடம் புதியதலைமுறை சார்பில் பேசினோம். அப்போது அவர், `மாற்றுத்திறனாளியாக உள்ள நாங்கள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதற்காகவே அரசின் நலத்திட்டங்கள் உள்ளன. அதன்கீழ் தான் மூன்று சக்கர வாகனத்தில் விண்ணப்பித்தோம். அது கிடைத்தால் அதன்மூலம் எங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ள உதவியாக இருக்கும் என நம்பினோம். ஆனால் எம்.எல்.ஏ-வின் இத்தகைய பேச்சு மிகுந்த மன வேதனை அளிப்பதாக உள்ளது’ என தெரிவித்தார்.

இது குறித்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமனிடம் கேட்ட போது, “அந்த ஆடியோவில் உள்ளது என்னுடைய குரல் தான். நான் ஒரு மருத்துவர். அதனால் எமர்ஜென்சிக்காக என்னுடைய மொபைல் நம்பரை கொடுத்திருக்கிறேன். அப்படியிருக்கும்போது ஒவ்வொருவரும் என்னிடம் ஃபோன் செய்து, `என் மனு என்ன ஆச்சு’ என்று கேக்கும்போது அதற்கு எப்படி உடனே உரிய பதிலை அளிக்க முடியும்? ஒவ்வொரு நாளும் இங்கு மனுக்கள் அளவுக்கு அதிகமாக குவிந்து வருகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு முறையும் தனிப்பட்டு பதில் சொல்ல முடியாத சூழல் உள்ளது. மக்களுக்கு இது புரியவில்லை.

இவரையும்கூட நேரில்தான் வரச்சொல்லி சொல்லியிருந்தோம். ஆனால் மொபைலிலேயே அப்டேட் கேட்டு அடிக்கடி ஃபோன் செய்து வந்தார். 20 முறை என்னை அனுகியதாக சொல்கிறார். பலவுமே மொபைலில்தான் பேசினார். அதனால்தான் அன்று அப்படி பேசிவிட்டேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். ஆனால் இனி ஃபோனில் பதில் சொல்லவே அச்சமாக உள்ளது. இவர்கள் இப்படி ஒரு விஷயத்தை மட்டும் ட்ராக் செய்து பரப்புகிறார்கள் எனும்பட்சத்தில் என்னதான் செய்வது?’ எனவும் தெரிவித்துள்ளார்.