சாத்தான்குளம் விவகாரம் லாக்கப் மரணம் கிடையாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
பொது முடக்கத்தை மீறி கடையைத் திறந்ததாகக் கூறி சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் கடந்த 19ஆம் தேதி காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அவர்களை கைது செய்தது போலீஸ். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், திடீரென அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
விசாரணைக் கைதிகள் உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக் கைதிகள் உயிரிழப்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கிரிக்கெட் வீரர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரம் லாக்கப் மரணம் கிடையாது அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “ காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே ‘லாக்கப் டெத்’ என்று பெயர். ஆனால் சாத்தான்குளம் விவகாரத்தில் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன் பின் 2 நாளைக்கு பின்னர் தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இருந்தாலும் தமிழக முதல்வர், உடனடியாக குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்களை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து வழக்கினை எடுத்துள்ளது. உடற்கூறு ஆய்வு முதல் நீதிமன்ற அறிவுறுத்தலின் படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. சாத்தான்குளம் சம்பவம் ‘லாக்கப் டெத்’ என்று கனிமொழி கூறியுள்ளார். திமுக ஆட்சி காலத்திலும் ‘லாக்கப் டெத்’ நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூரில் உள்ள காவல் நிலையத்தில் 1996-ல் திமுக ஆட்சிக் காலத்தில் 2 பேர் உயிரிழந்த ‘லாக்அப் டெத்’ நடைபெற்று உள்ளது. இதை அரசியலுக்காக அவர் சொல்லுவதாக தான் எண்ண வேண்டும்
சாத்தான்குளம் விவகாரத்தினை தேர்தல் வாக்கு வங்கிற்காக எதிர்க்கட்சிகள் செய்ய நினைத்தால் மக்களுக்கு உண்மை தெரியும். முதலில் காவல்துறையினர் பணியிட மாற்றம் செய்யப்பட்டாலும், மக்களின் உணர்வுகளை மதித்து பணியிடை நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டார். நீதிமன்ற என்ன வழிமுறைகள் சொல்கிறதே, என்ன தீர்ப்பு சொல்கிறதோ உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது” என்றார்.