தமிழ்நாடு

ஊருக்கு நடுவே பவானி ஆறு... ஆனாலும் குடிநீருக்கு வழியில்லாமல் தவிக்கும் சத்தியமங்கல மக்கள்!

ஊருக்கு நடுவே பவானி ஆறு... ஆனாலும் குடிநீருக்கு வழியில்லாமல் தவிக்கும் சத்தியமங்கல மக்கள்!

நிவேதா ஜெகராஜா

சத்தியமங்கலம் குள்ளங்கரடு பகுதியில் குடிநீருக்கான மேல்நிலை தொட்டி கட்டி இரண்டு ஆண்டுகளாகியும் குடிநீர் விநியோகம் இல்லாமல் இருக்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பலரும் கடுமையாக அவதியுற்று வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி பகுதிக்கு உட்பட்டது குள்ளங்கரடு பகுதி. இப்பகுதியில் உள்ள 800க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 3 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அவர்களில் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த வெவ்வேறு வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் அதிகம். குறிப்பாக தினசரி விவசாயக் கூலி வேலைக்குச் செல்பவர்கள் பலர் இங்கு உள்ளனர்.

“சத்தியமங்கலம் நகராட்சியின் மையப்பகுதியில்தான் பவானி ஆறு ஓடுகிறது. இந்த நகராட்சிக்கு உட்பட்டுதான் குள்ளங்கரடு பகுதி இருக்கிறதென்றபோதிலும்கூட இங்கு இன்னமும் குடிநீர் வசதி செய்து தரப்படாமல் இருக்கிறது. இதற்கு முன்னரும் இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டது. அப்போது 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டப்பட்டு தந்தது. ஆனால் அது கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை குடிநீர் விநியோகம் செய்துத்தரப்படாமல் உள்ளது” என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதன் காரணமாக குள்ளங்கரடு பொதுமக்கள் குடிநீருக்காக காலிக் குடங்களுடன் ஒவ்வொரு முறையும் விவசாய தோட்டங்களுக்கு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. விவசாய தோட்ட உரிமையாளர்களுக்கும் இது இடைஞ்சலாக இருப்பதால், மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இங்கு நான்கு நாட்களுக்கு ஒருமுறை லாரி மூலம் குடிநீர் வழங்கப்படும் முறை இப்போதைக்கு அமலில் உள்ளது. ஆனால் அப்போதுகூட, ஒரு குடும்பத்திற்கு 5 குடம் மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். லாரி வரும் நாட்களில், தண்ணீர் பிடிப்பதற்காகவே கூலி வேலைக்கு செல்லாமல் இருக்கிறார்கள் சிலர். லாரி வரும் நாளில் தண்ணீர் பிடித்து வைத்துக்கொண்டால் மட்டுமே, அடுத்த 4 நாட்களை சமாளிக்க முடியும் என்பதால் ஒரு நாள் சம்பளத்தையே இழப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். 

தங்களின் இந்த நிலையை அரசு சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். சத்தியமங்கலத்தின் மையப்பகுதியில் பவானி ஆறு ஓடியும்கூட, அதற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரின்றி தவிக்கும் இந்த அவல நிலை என்று சீராகும் என்று தெரியவில்லை.

 - டி.சாம்ராஜ்