Farmers Protest pt desk
தமிழ்நாடு

சத்தியமங்கலம்: யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு – பிரேத பரிசோதனை செய்ய விடாமல் விவசாயிகள் போராட்டம்

webteam

செய்தியாளர்: D.சாம்ராஜ்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி மலை கிராமங்களில் வாழும் மக்களுக்கு விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இருப்பினும் அது மலைப்பகுதி என்பதால் விவசாயப் பயிர்களை யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் சேதப்படுத்துவது தினந்தோறும் நடந்து வருகிறது. இதில் இரவு நேர காவலுக்குச் செல்லும் விவசாயிகளை யானை தாக்குவதும், அதில் சிலர் உயிரிழப்பதும் அடிக்கடி நடப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

யானை தாக்கியதில் உயிரிழந்த மூதாட்டி காளம்மாள்

இந்நிலையில் நெய்தாளபுரத்தில் உள்ள தோட்டத்துக்குச் சென்ற காளம்மாள் என்ற மூதாட்டியை, அந்த வழியாகச் சென்ற யானை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் மூதாட்டியை தாக்கிய யானையை காட்டுக்குள் விரட்டினர். இதையடுத்து உயிரிழந்த காளம்மாள் உடலை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து அங்கு வந்த விவசாயிகள், “யானையால் கொல்லப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? யானைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கும் வரை பிரேத பரிசோதனை செய்ய விடமாட்டோம்” எனக்கூறி தாளவாடி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சதீஸ், ராமலிங்கம் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.