சத்யபிரதா சாகு pt web
தமிழ்நாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் | தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான புகார்கள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்

PT WEB

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் ஏப்ரல் 19 ஆம் தேதி காலை 7 மணி அளவில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் வெளிநாடு, வெளியூரில் இருந்தவர்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர்.

மக்களவை தேர்தல் 2024 | வாக்கு

அப்படி வாக்களிக்க சென்ற பெரும்பாலானவர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. பலருக்கும் ‘உங்களின் பெயர் இல்லை’ என்றே வாக்குச்சாவடி மையங்களில் பதில் கிடைத்தது. இதனால் தங்களின் கடமையை ஆற்ற இயலாது ஏமாற்றத்துடன் சென்ற மக்கள் சமூக வலைதளம் போன்றவற்றில் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான புகார்கள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்துள்ளார்.

சத்யபிரதா சாகு

அவர் கூறுகையில், “வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் குறித்து அக்டோபர் மாதத்தில் இருந்து அந்தந்த அரசியல் கட்சிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பெயர் சேர்த்தல் - நீக்குதல், முகவரி மாற்றம் குறித்த தகவல் அரசியல் கட்சிகளுக்கு முறைப்படி கடந்த அக்டோபர் முதல் தெரிவிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை செல்லுபடி ஆகும்.

ஒரு வாக்காளர் நீண்ட காலமாக அவரது முகவரியில் இல்லாமல் இருந்தாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் போகும். ஏனென்றால் சிறப்பு முகாமின் போது அங்கு வரும் தேர்தல் அதிகாரி அவர் அங்கு இல்லை என்று கூறி எழுதி இருக்கலாம்.

புதிய வாக்காளர் அட்டை இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என்று எதுவும் விதி இல்லை. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் விடுபட்டது தொடர்பாக case by case விசாரணை நடத்த வேண்டும். SSR நடக்கும் போது ERO அனைத்து வாரம் வாரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்துவார். அந்த ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு வாரமும் வந்திருக்கும் பல்வேறு விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அளிப்பார்.

அந்த நேரத்தில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் வாக்காளர் பட்டியலில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தெரிவிக்கலாம். இது போன்ற நடைமுறைதான் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் சரிபார்க்கவும் தொடர்ந்து பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

SSR நடக்கும் போது சிறப்பு முகாம்களும் அமைக்கப்படுகிறது. ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தால் எளிதாக பெயரை சேர்க்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.