சென்னை தீவுத்திடல் அருகே கூவம் கரையோரம் வசித்துவரும் சத்தியவாணி முத்து நகர் பகுதி மக்களை வெளியேற்றி வருவதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்திற்குப்பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூவம் கரையோரம் வசிக்கும் பகுதி மக்களை வேறு இடங்களுக்கு மாற்றியும் கூவம் ஆற்றை மறுசீரமைப்பு செய்யவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடுத்தடுத்த கட்டமாக கூவம் பகுதி மக்களை கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் குடியமர்த்தி வருகிறது.
கடந்த ஆண்டே தீவுத்திடல் அருகேயுள்ள சத்தியவாணி முத்துநகர் பகுதி மக்களில் பலரை வேறு பகுதிகளில் அரசு குடியமர்த்தியது. இன்னும், இங்கு தற்போது 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது வசித்துவரும் மக்களை வேறு பகுதிகளில் குடியமர்த்த அவர்களின் வீடுகளை அகற்றி வருகிறது அரசு.
ஆனால், இப்பகுதி மக்களோ ’எங்களை சென்னையிலிருந்து தூரமாக குடியேற்றினால் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால், அருகிலேயே குடியிருப்புகளைத் தாருங்கள்’ என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். நேற்று கூவம் ஆற்றில் இறங்கி எல்லாம் போராடினார்கள்.
இந்தப் போராட்டத்திற்கு இயக்குநர் பா.ரஞ்சித் நேரில் கலந்துகொண்டு தமிழக அரசிடம் கோரிக்கையும் வைத்தார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் “கூவத்தில் நிற்கிறார்கள் சத்தியவாணி நகர் மனிதர்கள். பூர்வகுடிகளை நகருக்கு வெளியே நகர்த்துவதா நலத் திட்டம்? மனித உரிமைகள் தினத்தை செயலளவில் காண்பது எந்நாள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்