தமிழ்நாடு

சாத்தான்குளம் வழக்கு : அனைத்து ஆவணங்களும் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம்

சாத்தான்குளம் வழக்கு : அனைத்து ஆவணங்களும் மதுரை நீதிமன்றத்திற்கு மாற்றம்

webteam

சாத்தான்குளம் வழக்கு சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று முதல் சிபிஐ நேரடியாக விசாரணையை தொடங்கவுள்ளது. இந்நிலையில் வழக்கு தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள், வழக்கு சம்பந்தப்பட்ட பொருட்களான தந்தை மகனை அடிக்கப் பயன்படுத்திய லத்தி உள்ளிட்ட பொருள்கள், தடயங்கள் உள்ளிட்ட அனைத்தும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு மாவட்ட தலைமை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்தகுமார் முன்பாக சமர்ப்பிக்கப்பட்டது.

இதனிடையே சென்னையிலிருந்து கார் மூலமாக 10 பேர் கொண்ட சிபிஐ அலுவலர் குழு வருகை தந்த நிலையில் மதுரை சிபிஐ அலுவலகத்தில் தற்போது ஆலோசனை நடைபெற்றுவருகிறது. தொடர்ந்து மதியம் சுமார் 1.30 மணியளவில் சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் தூத்துக்குடி சென்று பின்னர் சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமாரிடமிருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றபின், முழுமையாக வழக்கு விசாரணை சிபிஐ வசம் செல்லும் என தெரியவருகிறது.