வருகிற 7ஆம் தேதி சசிகலா தமிழகம் வருவதாக செய்திகள் வெளியான நிலையில், 7ஆம் தேதி சசிகலா தமிழகம் வருகிறார் என்பதை டிடிவி தினகரன் உறுதிப்படுத்தி இருக்கிறார். பெங்களூரில் இருந்து தமிழகம் வரும் சசிகலாவுக்கு வழி நெடுகிலும் தொண்டர்கள் வரவேற்று அளிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசியல் சதுரங்கம் நிகழ்ச்சியில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் பேசும்போது...
அரசியல் களத்தில் கெமிக்கல் ரியாக்சன் நடக்கிறது என்பதெல்லாம் அவருடைய கருத்து. அதிமுகவை பொறுத்தவரை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தங்களது கருத்துக்களை எப்போதே வெளிப்படுத்தி விட்டார்கள்.
சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுவது ட்விட் போடுவதெல்லாம் ஒன்றிரண்டு பேர் செய்யும் வேலை இதையெல்லாம் ஓராயிரம் பேர், ஒருலட்சம் பேர், ஒருகோடி பேரின் கருத்தாக எப்படி பதிவுசெய்ய முடியும். சின்னச் சின்ன விசயங்களை வைத்துக் கொண்டு அது பெரிய சமுத்திரமாக மாறிவிடும் என்று சொல்வது ஒரு கற்பனையான விசயமாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கணபதியிடம் கேட்டதற்கு...
சசிகலாவின் வருகை நிச்சயமாக அதிமுகவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். தேர்தல் நெருங்குவதால் தாக்கம் இருக்கத்தான் செய்யும். சசிகலா சிறைக்கு செல்லும்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்தார் என்பதும். கூவத்தூரில் அத்தனை எம்எல்ஏ -களையும் கொண்டுபோய் வைத்திருந்து முதலமைச்சரை தேர்ந்தெடுத்தார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்.
அதிமுகவை சேர்ந்த இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நிர்வாகிகள்தான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் வெளிப்படையாக ஒரு அமைச்சரோ, மாவட்ட செயலாளரோ சசிகலாவை நோக்கி போகும் போதுதான் சசிகலாவின் பலம் என்ன என்பது தெரியவரும்.