தமிழ்நாடு

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மூலம் ஷாப்பிங் மால்கள் வாங்கினாரா சசிகலா?

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மூலம் ஷாப்பிங் மால்கள் வாங்கினாரா சசிகலா?

jagadeesh

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் தடைசெய்யப்பட்ட ரூபாய் 500, 1000 நோட்டுகளை பயன்படுத்தி ஷாப்பிங் மால்களை வாங்கினார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் நவம்பர் 8, 2016-க்குப் பிறகு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்தி ஒரு ரிசார்ட் இரண்டு ஷாப்பிங் மால்கள், ஒரு மென்பொருள் நிறுவனம், ஒரு சர்க்கரை ஆலை, ஒரு காகித ஆலை மற்றும் 50 காற்றாலைகளை சசிகலா வாங்கினார். இவைகள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ளவை ஆகும் என தெரிவித்துள்ளது.

சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில் சசிகலா தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளின் விவரங்களை வருமான வரித்துறையினர் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

இதில் சில விளக்கங்கள் கேட்டு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. மறுமதிப்பீடு தொடர்பான விசாரணையின்போது சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி அளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “எனக்கு எதிராக சேகரித்த சாட்சியங்களின் விவரங்கள் மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறை வழங்காததால் என் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க முடியவில்லை. வருமான வரித்துறையிடம் வாக்குமூலம் அளித்த எனது உறவினர்களான கிரு‌‌ஷ்ணப்பிரியா, ‌‌ஷகீலா, விவேக் ஜெயராமன், டாக்டர் சிவக்குமார் உள்ளிட்ட 14 பேரிடமும், எனக்கு சொந்தமானதாக கூறப்படும் நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் ஆடிட்டர்களிடமும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். அதுவரை மதிப்பீடு தொடர்பாக வருமான வரித்துறை உத்தரவு பிறப்பிக்க தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், "சசிகலாவின் வருமான வரி கணக்கு தொடர்பான மதிப்பீட்டு பணிகள் ஏற்கெனவே நிறைவடைந்து விட்டதால் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல"என்று வாதாடினார்.இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.