அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து வி.கே.சசிகலா தொடுத்த மேல்முறையீட்டு மனுமீது நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அப்போது, அதிமுகவில் மூத்த தலைவர்களாக இருந்த மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் முன்மொழியப்பட்டும், வழிமொழியப்பட்டும் இடைக்கால பொதுச் செயலாளராக பதவியை வகித்த சசிகலாவை நீக்கியது செல்லாது என அவரது தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் அடிப்படை அமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய சசிகலா தரப்பு, எந்த நோக்கத்துடன் எம்.ஜி.ஆர். விதிகளை உருவாக்கினாரோ, அந்த விதிகளுக்கு புறம்பாக கட்சி விதிகளை இஷ்டம்போல திருத்தம் செய்துள்ளதாக வாதிட்டது.
விசாரணையின் போது நீதிபதிகள் முன்வைத்த கேள்விகளுக்கும், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் பதிலளித்தார். வாதங்கள் நிறைவடையாததால் வழக்கின் விசாரணை இன்றும் தொடர உள்ளது.