சசிகலா web
தமிழ்நாடு

``அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’’-சசிகலாவின் சுற்றுப்பயணம் வெற்றிப் பயணமாக மாறுமா? புஸ்வானம் ஆகுமா?

``அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’’ எனும் பெயரில் வரும் 17-ம் தேதி தென்காசியில் இருந்து தன் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார் சசிகலா...

இரா.செந்தில் கரிகாலன்

தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக தலைமையிலான ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும் இந்த `அம்மாவின் வழியில் மக்கள் பயணம்’’ என்ற சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாக சசிகலா அறிவித்திருக்கிறார்... ஆனால், ``அனைவரையும் ஒன்றிணைக்கவேண்டும்’’ என அதிமுகவில் தற்போது எழுந்திருக்கும் புகைச்சலை பயன்படுத்திக்கொள்ளவே சசிகலா இந்தத் திட்டத்தை வகுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.. கடந்த காலங்களில் சசிகலா சுற்றுப்பயணம் சென்றபோது அவருக்கு பெரியளவில் ஆதரவு கிடைக்கவில்லை.., ஆனால், இப்போது அப்படி இருக்கப்போவதில்லை என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்...

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சசிகலா...அதில், ```நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதை தீர்மானிப்பது, மக்கள்தான். இந்த தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க குறித்து எல்லோருக்கும் புரியும். அ.தி.மு.க ஒன்றாக இணைவதற்கான நேரம் வந்துவிட்டது. நான், என் அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஒரே அணியாக போட்டியிட்டு வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்கும். நான் அமைதியாக இருப்பதற்கான விடை விரைவில் கிடைக்கும்" என்றார்.

jayalalitha, sasikala

தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, “கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும். உங்கள் அனைவரையும் 'ஜெயலலிதா இல்லம்' அன்புடன் வரவேற்கிறது” என அழைப்பு விடுத்திருந்தார்...ஆனால், ``சசிகலா, ஜெயலலிதாவுக்கு பணிவிடை செய்ய வந்தவர். அவருடன், 36 ஆண்டுகள் பின்னால் நின்று அதிகாரத்தை சுவைத்தவர். அவர், தற்போது அனைவரும் ஒற்றுமையாக வாருங்கள் என அழைத்து அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை விடுத்து, 24 மணி நேரமாகியும் யார் அவரிடம் சென்றார்கள் என்பதை உங்கள் பார்வைக்கே விட்டுவிடுகின்றேன்’’ என துணைப் பொதுச் செயலாளர், கே.பி.முனுசாமி பத்திரிகையாளர் சந்திப்பில் கடுமையான விமர்சனங்களையே முன்வைத்தார்,,,

அதிமுக முடிந்துவிட்டது என நினைக்காதீர்கள்..

தொடர்ந்து, ஜூன் 16-ம் தேதி அதிமுக தொண்டர்களை சசிகலா சந்திக்கப்போகிறார் என்கிற தகவல்கள் வெளியானது.. தொடர்ந்து அன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த சசிகலா, ``“பொதுமக்களுக்கு அதிமுக என்றால் பிரியம் அதிகம். நல்ல நேரம் இப்போது வந்துவிட்டது. காலம் கணிந்துள்ளது. இதையே எப்போதும் சொல்கிறேன் என எண்ண வேண்டாம். இதுதான் சரியான நேரம். நிச்சயமாக தமிழக மக்கள் நம் பக்கம்தான். அதிமுக முடிந்துவிட்டது என நினைக்க முடியாது. என்னுடைய என்ட்ரி இப்போது ஆரம்பமாகிவிட்டது. மக்கள் எனக்காக இருக்கிறார்கள். 2026-ல் அம்மாவுடைய ஆட்சியை நிச்சயமாக அமைப்போம். தனிப்பெருங்கட்சியாக இருப்போம்” என தடாலடியான கருத்துக்களைத் தெரிவித்தார்.. ஆனால், ` ஜானகி அம்மாவைப் போல சசிகலா செயல்பட வேண்டும்’’ என்றார் எடப்பாடி பழனிசாமி.. அதாவது ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொன்னார்..,

சசிகலா

இந்தநிலையில்தான் கடந்த ஜூலை 8-ம் தேதி, எடப்பாடியின் சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள். செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகிய ஆறு பேரும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததாக செய்திகள் வெளியானது... நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்தும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் கோரிக்கை வைத்ததாகவும் தகவல்கள் வெளியானது..

தொடர்ந்து, இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி குறித்து, தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. அப்போது, தஞ்சை தொகுதிக்கான நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும், சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்கவேண்டும் என கோரிக்கை முன்வைத்ததாக தகவல்கள் வெளியானது...

இந்தநிலையில், வரும் 17-ம் தேதி, தென்காசியில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்குவதாக சசிகலா தரப்பில் இருந்து அறிக்கை வெளியாகியுள்ளது... தொடர்ந்து, கடையநல்லூர், வாசுதேவன் நல்லூர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிகளில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது...

அரசியல் பயணத்திற்கான நேரம் வந்துவிட்டது..

நான்காண்டு சிறைவாசத்துக்குப் பிறகு கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியே வந்த சசிகலா,ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் தஞ்சாவூர், ராமேஸ்வரம், திருப்புல்லாணி, மதுரை மீனாட்சியம்மன், திருப்பரங்குன்றம், அழகர்மலை, திருச்செந்தூர் என தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போதே சில முக்கியமான அதிமுக தலைவர்கள் அவரைச் சந்திக்கப்போகின்றனர் என்கிற தகவல்கள் வெளியானது...ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை... ஒருசில அதிமுக மற்றும் அமமுக நிர்வாகிகளை மட்டுமே சந்தித்தார்.

தொடர்ந்து, அக்டோபர் 26-ம் தேதி சென்னையிலிருந்து அ.தி.மு.க கொடி கட்டிய காரில் தன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார் சசிகலா. பசும்பொன்னுக்குச் சென்று முத்துராமலிங்கத் தேவர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, தஞ்சையில் தன் இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்தார். சில இடைவெளிக்குப் பிறகு 2022 ஏப்ரல் மாதம் மீண்டும் ஆன்மிகப்பயணத்தைத் தொடங்கினார். அந்த நேரத்தில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது,. முசிறி அருகே ஆன்மிகச் சுற்றுப்பயணத்தில் இருந்தார் சசிகலா. தொடர்ந்து, நாமக்கல், சேலம், ஈரோடு என சுற்றுப்பயணம் சென்ற சசிகலா, வெவ்வேறு இடங்களில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.அப்போது, `` `ஆன்மிகப் பயணமாகத்தான் தொடங்கினேன். ஆனால், அரசியல் பயணத்துக்கான நேரம் வந்துவிட்டதாக இப்போது உணர்கிறேன்’’ எனக் கொந்தளித்தார்.

தொடர்ந்து, 2022 டிசம்பர் மாதத்தில், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் சசிகலா. ஆனால், பெரியளவில் அவருக்கான ஆதரவு கிடைக்கவில்லை...சுற்றிய மூன்று மாவட்டங்களையே மீண்டும் மீண்டும் சுற்றி வந்தார்...தொடர்ந்து, 2023 ஜூலை மாதம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அப்போதும் பெரியளவில் அவருக்கான ஆதரவு கிடைக்கவில்லை...அதோடு, கொடநாடு பயணம், புதிய வீட்டுக்குக் குடியேற்றம் என பல நிகழ்வுகள் நடந்தபோதும் எதுவும் நடக்கவில்லை...ஆனால், இந்தமுறை சசிகலாவின் சுற்றுப்பயணம் இதற்கு முன்புபோல் இருக்காது..நிச்சயமாக ஒரு மாற்றம் இருக்கும் என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்..,

Sasikala

``இதற்கு முன்பாக சின்னம்மா சுற்றுப்பயணம் செல்லும்போது அமமுக நிர்வாகிகளுடம் ஒருசில அதிமுக நிர்வாகிகளுடம் தான் அவருக்கு ஆதரவாக இருந்தனர்... ஒருகட்டத்தில், அமமுக நிர்வாகிகளும் தினகரனின் பேச்சைக்கேட்டு அமைதியாக இருந்துவிட்டனர்...அதிமுக நிர்வாகிகளும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை...ஆனால், அனைவரும் ஒன்றுசேரவேண்டும் என கட்சிக்குள் தற்போது கலகம் வெடித்திருக்கிறது... அந்தக் கலகத்தை உருவாக்கியவர்கள் மிக முக்கியமான முன்னாள் அமைச்சர்கள்... அதனால், இந்த சுற்றுப்பயணத்தில் சின்னம்மா சொன்னது போல் ஒரு மாற்றம் நிச்சயம் நடக்கும்’’ என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்..,

கடந்தகாலங்களைப் போலவே சசிகலாவின் சுற்றுப்பயணம் வெற்றுப்பயணமாகப் போகுமா, இல்லை சசிகலா சொல்வதைப் போல வெற்றிப் பயணமாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..,