தமிழ்நாடு

'சசிகலா சிறையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம்!'

JustinDurai
1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது, இதில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா காலமானதால் மற்ற மூவருக்கும் நான்காண்டுகள் சிறை தண்டனையும், தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, தண்டனை அனுபவித்து வருகிறார். வரும் ஜனவரி 27-ந் தேதி சசிகலா விடுவிக்கப்படுவார் என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறை தெரிவித்துள்ள நிலையில் அவரை சிறையில் இருந்து விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை அவரது வழக்கறிஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே தண்டனையுடன் கூடிய அபராதத் தொகையான பத்து கோடியையும் சசிகலா கட்டிவிட்டார்.
 
இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’விற்கு அளித்து பேட்டியில் கூறியிருப்பதாவது:-
 
சசிகலா ஜனவரி 27-ந் தேதி விடுவிக்கப்படுவார் என்று ஏற்கெனவே தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத்துறை அறிவித்துள்ளது. இதன்படி, பார்த்தால் இன்னும் 68 நாட்கள் மட்டுமே சசிகலா சிறையில் இருக்க வேண்டியது உள்ளது. சசிகலாவிற்கு நன்னடத்தை விதிகளின் கீழ் 129 நாட்கள் சலுகை உள்ளது.
 
எவ்வாறெனில் கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். எனவே சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129 நாட்கள் அவருக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. எனவே அவர் எப்போது வேண்டுமானாலும் சிறையிலிருந்து விடுவிக்கப்படலாம்” எனக் கூறினார்.