சசிகலாவை பலமுறை சிறையில் சென்று சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அவருக்கு அங்கு சிறப்பு வசதிகள் கொடுத்தது குறித்து எதுவும் தெரியாது எனக் கூறியுள்ளார்.
பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டுள்ளதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றச்சாட்டு கூறியதால், அவருக்கும், டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கும் இடையே மோதல் உருவானது. இந்த விவகாரத்தில் சிறைத்துறையில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரிகளான சத்திய நாராயணராவ், ரூபா ஆகியோரை கர்நாடக அரசு நேற்று அதிரடியாக பணி இடமாற்றம் செய்துள்ளது.
ரூ.2 கோடி லஞ்சம் வாங்கி கொண்டு சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் வகையில், சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பது தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகியது. சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டது தொடர்பாக அதிமுக அம்மா அணி எம்.பி. தம்பிதுரை பதில்தர மறுத்துவிட்டார். சசிகலாவுக்கு சலுகை அளிக்கப்பட்டதா என்பதை கர்நாடக அரசிடம்தான் கேட்க வேண்டும். என்னிடம் கேட்பதில் அர்த்தம் கிடையாது. சசிகலாவுக்கு சிறையில் சலுகை அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என கூறிஉள்ளார் தம்பிதுரை.
சசிகலாவை சிறைக்குச்சென்று பலமுறை நேரில் சந்தித்துப் பேசிய தம்பிதுரை, சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தனக்கு தெரியாது என கூறுவது நம்பும்படியாக இல்லை என்றும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.