தமிழ்நாடு

நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!

நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!

webteam

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உற்ற தோழியாக இருந்து வந்த வந்தவர் சசிகலா. ஒரு சாதாரண வீட்டுப் பெண் என்ற நிலையிலிருந்து, தமிழகத்தின் சக்திவாய்ந்த இரும்புப் பெண்மணியின் தோழி மற்றும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என்று வகித்த பொறுப்பு வரை, சசிகலாவின் வாழ்க்கைப் பயணம் நம்ப முடியாத பல திருப்பங்களை சந்தித்துள்ளது.

1984-ல் ஜெயலலிதாவுக்கு அறிமுகமான சசிகலா, மெள்ள மெள்ள அவரது நம்பிக்கையைப் பெற்றவராக வளர ஆரம்பித்தார். ஜெயலலிதா மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில், அவரோடு டெல்லி செல்லும் அளவுக்கு நெருக்கமானார். அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு இந்த நெருக்கம் இன்னும் தீவிரமானது. 1988-லிருந்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார் சசிகலா. இந்தக் காலகட்டத்தில்தான் ஜெயலலிதா வெகுவாக சசிகலாவைச் சார்ந்திருப்பவராக மாறினார். அப்போது ஆரம்பித்த சசிகலாவின் பின்னணி சாம்ராஜ்யம் ஜெயலலிதா மரணம் வரையிலுமே தொடர்ந்தது.

ஜெயலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலாவின் சாம்ராஜ்யம் சரியத் தொடங்கியது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குச் செல்லும் முன் அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைத்தார். பின்னர் அவரே சசிகலாவுக்கு எதிராக நிற்கிறார். தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் ஒப்புக்கொண்டாலும் தனக்கு உடன்பாடு இல்லை எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

இது ஒருபுறம் இருக்க, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பாஜகவின் நிழல் ஆதிக்கம் அதிகமாக தமிழகத்தில் இடம்பெறுகிறது. முதல் முதலில் முதல்வர் பதவியை ஏற்ற எடப்பாடி பழனிசாமி தனக்கான ஆதரவை திரட்டிகொண்டிருந்த காலம். 2016 ஆம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது, இது தமிழகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைக்குனிவு என அனைத்து தலைவர்களும் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களிலும் மத்திய அரசின் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஏராளமான கணக்கில் வராத, பணம், ஆவணங்கள் சிக்கியதாகவும் அப்போது கூறப்பட்டது.

அதன்பின்னரே பாஜகவுடன் அதிமுக இணக்கமாக அரம்பித்தது என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இவ்வாறு தனது நிழல் ஆதிக்கத்தை தொடர்ந்த பாஜக பின்னர், தமிழகத்தில் எப்படியாவது தங்கள் ஆதிக்கத்தையும், இடத்தையும் பிடித்துவிட வேண்டும் என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாஜகவின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும் அது தெரியும். ஜெயலலிதா தனது ஆட்சி காலத்தில் பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, பாஜகவை முற்றிலும் ஆதரித்து வருவதோடு, கூட்டணியிலும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அதிமுகவை வைத்தே தமிழகத்தில் தங்களுக்கு என அங்கீகாரத்தை பெற முடியும் என பாஜகவின் அசைக்க முடியாத நம்பிக்கை. தமிழகத்தில் குறைந்தபட்ச அளவிலான எம்.எல்.ஏக்கள் பாஜக தரப்பில் தேர்வு செய்யப்பட்டாலே அது மிகப்பெரிய வெற்றிதான். அதற்கான முனைப்பில்தான் பாஜக கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நேரம் கைக்கூடி வரும் நிலையில், சசிகலாவின் விடுதலையும் உறுதியானது.

வெளியே வந்த சசிகலா "தீவிர அரசியலில் ஈடுபடுவேன். தொண்டர்களை சந்திப்பேன். அன்புக்கு அடிபணிவேன். அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன்" என கூக்குரலிட்டார். இதனால், அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூட "பெங்களூரில் இருந்து ஒருவர் கிளம்பிவிட்டார்" என்றார். அதிமுகவை கைப்பற்றவே அமமுகவை தொடங்கியதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் கூறிவந்தார்.

சசிகலா வருகையில் அதிமுக தோல்வியை சந்திக்கும் என பயந்த பாஜக, அதிமுகவுடன் சசிகலா இணைப்பை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாக பேச்சு எழுந்தது. ஆனால், அதற்கு மட்டும் எடப்பாடி பழனிசாமி அசைந்து கொடுக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின. இதன்பின்னர்தான் சசிகலாவை ஒதுங்கிக்கொள்ளுமாறு பாஜக வலியுறுத்தியதாக வலுவான யூகம் எழுந்துள்ளது.

சசிகலா தனது அரசியல் வியூகத்தை வகுப்பார் என்று நினைத்து கொண்டிருந்த வேளையில், அனைத்தும் புஸ்வானம் ஆகிவிட்டது. அதற்கு காரணம், சசிகலா விட்ட ஒற்றை அறிக்கை. அதில், பொது வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய விரும்புகிறேன் என்றும், ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து, ஜெயலலிதாவின் ஆட்சி நிலவிட பாடுபட வேண்டும் எனக் கூறியுள்ள சசிகலா, தான் எப்போதும் பதவிக்காகவோ, பட்டத்துக்காகவோ, அதிகாரத்துக்காகவோ ஆசைப்பட்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தன் மீது அன்பும் அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சசிகலா, ஜெயலலிதா இருந்தபோதே அவரது எண்ணத்தை செயல்படுத்த எப்படி சகோதரியாக இருந்தேனோ இப்போதும் அப்படியே இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரனும் மிகுந்த அதிர்ச்சியும் சோர்வும் அடைந்ததாக கூறியுள்ளார். சசிகலா திடீரென 'பல்டி' அடிக்க என்ன காரணம் என அனைவரது மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு சொந்தமான இடங்களில் 3 மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். வெற்றிவேல், உசிலம்பட்டி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனின் சகோதரர். மகேந்திரன் தற்போது அதிமுகவிலிருந்து விலகி அமமுக மாநில அமைப்பு செயலாளராக உள்ளார். இந்த நேரத்தில்தான் திடீரென சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதன்மூலம் சசிகலாவுக்கு ஏதாவது நிர்பந்தம் ஏற்பட்டிருக்குமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சசிகலா மீது சொத்துக் குவிப்பு வழக்கு முடிவுக்கு வந்தாலும், இன்னும் பல வழக்குகள் மத்திய அரசின் கைவசம் உள்ளன. அதனால் அரசியலில் இருந்து பலரது பகையையும், தோல்வியையும் சம்பாதிப்பதை விட கௌரவமாக ஒதுங்கிக் கொண்டால், ஜெயலலிதா வழிநடத்திய கட்சி தன்னால் தோற்றது என்ற அவப்பெயர் ஏற்படாது என்பதால் சசிலா விலகியிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என சிறைத் தண்டனை முடிந்து தமிழ்நாட்டிற்குள் மீண்டும் நுழைந்தபோது சசிகலா கூறியது, அதிமுகவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என பரபரப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போதைய சூழலில் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்ற சசிகலாவின் முடிவு, அதிமுகவுக்கு சாதகமானது எனக் கூறுகிறார், பத்திரிகையாளர் குபேந்திரன்.

1989 மார்ச் மாதம் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜெயலலிதா பின்னர், அந்த முடிவை மாற்றிக்கொண்டது போன்றே சசிகலாவும் மாற்றிக்கொள்ள வாய்ப்பிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கூறுகிறார்.

மத்திய அரசுக்கு எதிராக செயல்படக்கூடாது என்ற நோக்கத்திற்காக சசிகலா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டதாக சசிகலா கூறினாலும், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னரே இந்த முடிவு முற்றுப்புள்ளியா அல்லது மாற்றம் வருமா எனத் தெரியவரும் என்பதே அரசியல் நோக்கர்களின் பலரின் கருத்தாக இருக்கிறது