செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆண்கள் சிகிச்சை பெற்று வரும் வார்டில் தரையை சுத்தம் செய்து கொண்டிருந்த தூய்மை பணியாளர் ஒருவர் நோயாளிக்கு குளுக்கோஸ் பாட்டிலை மாற்றிவிடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில், தரையை சுத்தம் செய்யும் பணியாளர் குளுக்கோஸ் பாட்டிலை மாற்றிவிட்டு பின்னர் மீண்டும் தரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதுபோன்ற பணிகளில் தூய்மை பணியாளர் ஈடுபடலாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சசிரேகாவிடம் கேட்டபோது... இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. தரையை சுத்தம் செய்தவர் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.
எனவே ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் மற்றும் தூய்மை பணியாளரை நேரில் விசாரணைக்காக அழைத்துள்ளோம். இதை தூய்மை பணியாளர் வேண்டுமென்றே செய்தாரா? அல்லது யாராவது சொல்லி இப்பணியில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றார்.