தமிழ்நாடு

மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால் முன் ஜாமீன் கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம்

மணல் கடத்தல் வழக்கில் சிக்கினால் முன் ஜாமீன் கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம்

webteam

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமீன் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்கள் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 15 மனுக்கள், நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு எளிதாக முன்ஜாமீன் கிடைப்பதால் மணல் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தமிழகத்தில் கனிம வளமே இல்லாமல் போகும் சூழ்நிலை உருவாகி, குடிதண்ணீருக்கு அடுத்த தலைமுறை திண்டாட வேண்டியது நிலை உருவாகும் எனக் கூறினார்.

மேலும் முன்ஜாமீன் நிபந்தனையாக 25 ஆயிரம் ரூபாய் விதித்தாலும், அதை செலுத்த கும்பல் தயங்குவதில்லை என்றும் எளிதாக கிடைக்கும் முன்ஜாமீனால் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் தைரியமாக ஈடுபடுகின்றனர் என்றும் கூறினார்.

இது மட்டுமன்றி இனி மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு முன்ஜாமீன் கிடையாது என்றும் சில காலம் சிறையில் இருந்தால் தான் கடத்தலில் ஈடுபடுவோருக்கு
பயம் வரும் எனக் கூறி முன்ஜாமீன் கோரிய மனுக்களை செப்டம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.