தமிழ்நாடு

கடத்தல் மணல் தடுத்து நிறுத்தம்: டிராக்டரை ஏற்றி போலீசாரை கொலை செய்ய முயற்சி

கடத்தல் மணல் தடுத்து நிறுத்தம்: டிராக்டரை ஏற்றி போலீசாரை கொலை செய்ய முயற்சி

webteam

கரூர் குளித்தலை அருகே கடத்தல் மணலை தடுத்து நிறுத்திய போலீசார் மீது டிராக்டரை ஏற்றி கொலை முயற்சி செய்ததாக 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பாலவிடுதி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் தங்கவேல் உள்ளிட்ட சில போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அதில் கடத்தல் மணல் இருந்துள்ளது. உடனடியாக டிராக்டரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு உதவி ஆய்வாளர் கூறியுள்ளார்.

ஆனால் ஓட்டுநர்கள் அஜய் மற்றும் செந்தில் ஆகிய இருவரும் டிராக்டரை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லாமல் போலீசார் தங்கவேலை இடித்து தள்ளிவிட்டு வேகமாக வேறு வழியில் சென்றுள்ளனர். இதில் போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் போலீசாரின் இருசக்கர வாகனமும் சேதம் அடைந்தது.

இதனையடுத்து தப்பிச் சென்றவர்கள் மீது உதவி ஆய்வாளர் தங்கவேல் புகாரளித்துள்ளார். கொலைமுயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் அஜய், நாகப்பன், செந்தில், செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தப்பிச் சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.