வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்கள் pt web
தமிழ்நாடு

”சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்பு திசை திருப்பும் நடவடிக்கை; போராட்டம் தொடரும்” - சிஐடியு திட்டவட்டம்

PT WEB

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் இயங்கி வரும், சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தீர்க்கமான முடிவு எட்டப்படாததால், 6 ஆம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அமைச்சர்கள் தா.மோ. அன்பரன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில், முதலில் சிஐடியு மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை

இதனை தொடர்ந்து சாம்சங் நிர்வாகத்தினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தொழிலாளர்களின் கோரிக்கையான ஊதிய உயர்வு உள்ளிட்ட 14 கோரிக்கைகளை நிறைவேற்ற சாம்சங்நிறுவனம் ஒப்புகொண்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஒப்பந்தத்தை தாண்டி உள்ள குறைப்பாடுகள் விரைவில் தீர்க்கப்படும் என சாம்சங் நிறுவனம் உறுதியளித்துள்ளதால், தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையான, தொழிற்சங்க அங்கீகராம் குறித்த கேள்விக்கு, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், நீதிமன்றம் கூறுவதை ஏற்போம் என அமைச்சர் தா. மோ.அன்பரசன் தெரிவித்தார். அதேநேரத்தில், சி.ஐ.டி.யு. மாநிலச் செயலாளர் முத்துக்குமார் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என தெரிவித்துள்ளார். சாம்சங் நிறுவனத்தின் அறிவிப்புகள் பெரும்பான்மை தொழிலாளர்களுக்கு எதிரானது என்றும், போராட்டத்தின் உண்மை நிலையை திசைத் திருப்பும் செயல் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சாம்சங் தொழிலாளர்கள்

எனவே, தொழிலாளர்கள் போராட்டம் தொடரும் என்றும் முத்துக்குமார் அறிக்கையில் அறிவித்துள்ளார். 14 கோரிக்கைகள் நிறைவேற்ற சாம்சங் நிறுவனம் முன்வந்துள்ளதாக அரசு கூறும் நிலையில், திசை திருப்பும் செயல் என சிஐடியு தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.