வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் ஊழியர்கள் pt web
தமிழ்நாடு

”ஒன்றரை வயசு கொழந்த மேடம்.. இழந்துட்டு இருக்கேன்” - சாம்சங் நிறுவன ஊழியரின் மனைவி ஆதங்கம்!

PT WEB

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் நிறுவன ஊழியர்களை பணிக்கு வரவழைக்க, அவர்களது குடும்பத்தினரை நிர்வாகத்தினர் தொடர்புகொண்டு பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனிடையே சாம்சங் நிர்வாகத்திடம் ஒரு ஊழியரின் மனைவி ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஊழியர்களின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, பணிக்கு அனுப்பி வைக்குமாறு சாம்சங் நிர்வாகிகள் கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஊழியரின் மனைவி ஒருவருக்கு அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது தமது ஒன்றரை வயது குழந்தையின் மரணத்துக்கு சாம்சங் நிறுவனமே காரணம் என கூறி, அந்நிறுவன பெண் நிர்வாகியிடம், ஊழியரின் மனைவி ஆதங்கத்தை வெளிப்படுத்துவது போன்ற ஆடியோ வெளியாகியுள்ளது.

சாம்சங் நிர்வாகியிடம் அந்நிறுவன ஊழியரின் மனைவி ஆதங்கம் தெரிவித்ததாக வெளியான ஆடியோ குறித்து சாம்சங் நிறுவனத்தை தொடர்புகொள்ள முயற்சித்தோம். ஆனால், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களது விளக்கத்தை பெற்று வெளியிடவும் புதிய தலைமுறை தயாராக உள்ளது.