ராணுவ வீரர் ஜெகன் - அவர் வெளியிட்ட உணவின் புகைப்படம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஊட்டி : சாம்பாரில் கிடந்த எலிக்குட்டி..? உஷார் மக்களே..! வைரல் வீடியோவுக்கு அதிகாரிகளின் பதில் என்ன?

சுற்றுலாவுக்கு குடும்பத்துடன் ஊட்டி சென்ற ராணுவ அதிகாரிக்கு ஹோட்டலொன்றில் பரிமாறப்பட்ட சாம்பாரில், இறந்த நிலையில் சிறிய எலி கிடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதிகாரிகள் அது எலி இல்லையென மறுத்துள்ளனர். புழுவாக இருக்கலாமென கூறியுள்ளனர்.

யுவபுருஷ்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்பவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக தன் வீட்டுக்கு சென்ற அவர், தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது பிங்கர் போஸ்ட் பகுதியில் இயங்கி வரும் அம்மாஸ் கிச்சன் என்ற பிரபல தனியார் உணவகத்தில் குடும்பத்தினருடன் உணவருந்த சென்றுள்ளனர்.

அம்மாஸ் கிச்சன்

அங்கு தனக்கு கொடுத்த சாம்பாரில், இறந்த நிலையில் சிறிய எலி ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் ஜெகன். இது குறித்து ஹோட்டல் மேலாளரிடம் கேட்டபோது அவர் மெத்தனமாக பதில் அளித்ததால், அனைவரும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகம் மீது, மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்தார் அவர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் நந்தகுமாரிடம் நாம் கேட்ட போது, “வீடியோவில் பார்த்த வரை இது வெண்டைக்காயில் இருந்தது புழு என்று தெரிகிறது. எலிக்குட்டி போல் தெரியவில்லை. எதுவாகினும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

ராணுவ வீரர் ஜெகன் - அவர் வெளியிட்ட உணவின் புகைப்படம்

இருப்பினும் “அதிகாரிகள் அலட்சிய பதில் சொல்கின்றனர். உணவகத்துடன் இவர்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதை உணர முடிகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் உணவு தேவையை கண்டறியவும், ஆரோக்கியத்துடன் இங்குள்ள உணவகங்கள் உணவு வழங்குவதையும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்” என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.