திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 75 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கின.
திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு சரியான நேரத்தில் ஆற்றில் தண்ணீர் வந்ததாலும், அப்போது விட்டு விட்டு பெய்து வந்த மழையின் காரணமாகவும் நெல் விளைச்சல் அதிகரித்ததால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால், அறுவடைக்கு தயாராக இருந்து சுமார் 75 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன.
இதனால் கவலையடைந்துள்ள விவசாயிகள், பயிர்கள் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநரிடம் கேட்டபோது, மழைநீர் தேங்கியுள்ளதால் நெற்பயிர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது எனவும், அறுவடைக்கு மட்டுமே கால தாமதமாகும் எனவும் தெரிவித்தார். வயலில் தேங்கிநிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.