திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியார் சமத்துவபுரம் வீடுகளை பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் குளறுபடி நடந்துள்ளதாகவும், கணவன் - மனைவிக்கு இரண்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஒன்றியம் ராமசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 2010-ல் திமுக ஆட்சியின் போது பெரியார் சமத்துவபுரத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து சமுதாய மக்களும் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் சமத்துவபுரம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், கட்டி முடிக்கப்பட்ட சமத்துவபுரம் வீடுகள் பயனற்று வீணாகி வந்தது. இதையடுத்து மீண்டும் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில் ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்து சமத்துவபுரம் வீடுகள் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக ராமசமுத்திரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து சிறப்பு குழு அமைத்து பயனாளிகள் தேர்வு செய்யபப்ட்டு இறுதி பயனாளிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ராமசமுத்திரம் ஊராட்சி மேல் ஜி.பி.ஆர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் அவரது மனைவி முனியம்மாள் ஆகிய இருவருக்கும் சமத்துவபுரம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது தெரியவந்தது.
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்கு தனித் தனியாக வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது, பயனாளிகள் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.