தமிழ்நாடு

பொதுமக்களால் நடத்தப்பட்ட சமத்துவ ஜல்லிக்கட்டு - காளைகளை அடக்கி பரிசுகளை அள்ளிய வீரர்கள்

பொதுமக்களால் நடத்தப்பட்ட சமத்துவ ஜல்லிக்கட்டு - காளைகளை அடக்கி பரிசுகளை அள்ளிய வீரர்கள்

சங்கீதா

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் நடத்தும் மாபெரும் சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.

ஈச்சம்பட்டி கிராமத்தில் சாதி, மத பேதமின்றி பொதுமக்களால் நடத்தும் சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுக்கான பொதுமக்களால் நடத்தும் சமத்துவ ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை லால்குடி வருவாய் கோட்டாச்சியர் வைத்தியநாதன் துவங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்தப் போட்டியில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் சீறிச் சென்ற காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் இருந்தாலும் ஒரு சில காளைகளை வீரர்கள் அடக்கினார். போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினராக மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ. கதிரவன் பங்கேற்றார். ஜீயபுரம் டி.எஸ்.பி. பரவாசுதேவன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.