தமிழ்நாடு

பெங்களூர், பாண்டிச்சேரிக்கு இனி சேலத்தில் இருந்தும் பறக்கலாம்...!

பெங்களூர், பாண்டிச்சேரிக்கு இனி சேலத்தில் இருந்தும் பறக்கலாம்...!

webteam

சேலம் விமான நிலையத்தில் இருந்து  ஏர் ஒடிசா நிறுவனம் வரும் 15-ம் தேதி விமான போக்குவரத்து சேவையை துவக்குகிறது. சேலத்தில் இருந்து விமான சேவைக்கான டிக்கெட் புக்கிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில், தற்போது பெங்களூரு, புதுச்சேரிக்கு புதிதாக விமான சேவையை ஏர் ஒடிசா நிறுவனம் வழங்க உள்ளது.  இச்சேவை வரும்15-ம் தேதி முதல் தொடங்குகிறது. சேலம் ஓமலூர் அருகேயுள்ள கமலாபுரத்தில்,  1993ம் ஆண்டு விமான நிலையம் ஏற்படுத்தப்பட்டு, சென்னை-சேலம் இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. போதிய வருமானம் கிடைக்காததாலும், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததாலும் 2010ல் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசின் உதான் திட்டத்தின் மூலம் சேலம் விமான நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் ட்ரூ ஜெட் நிறுவனம் மூலம் மீண்டும் சேலம்-சென்னை இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. 

இந்த சூழலில் சேலத்தில் இருந்து மேலும் இரு நகரங்களுக்கு விமான சேவையை வழங்க  ஏர் ஒடிஷா நிறுவனம் முன்வந்துள்ளது. இந்நிறுவனம், சேலத்தில் இருந்து பெங்களூருவுக்கும், புதுச்சேரிக்கும் விமானத்தை இயக்குவதாக தெரிவித்துள்ளது. வரும் ஜூலை15-ம் தேதி முதல் இச்சேவை வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது பாண்டிச்சேரியில் இருந்து சேலம் வழியாக பெங்களூருக்கும், பெங்களூரிலிருந்து சேலம் வழியாக பாண்டிச்சேரிக்கும் ஏர் ஓடிஸா நிறுவனம் வரும் 15-ம் தேதியில்இருந்து விமான சேவையை துவக்குகிறது. பாண்டிச்சேரியில் காலை 9:10-க்கு புறப்பட்டு, காலை 10 மணிக்கு சேலம் வந்தடைகிறது. இதேபோன்று சேலத்தில் காலை 10:15 க்கு புறப்பட்டு காலை 10:55க்கு பெங்களுர் சென்றடைகிறது. பெங்களூரிலிருந்து காலை 11:15 க்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு சேலம் வந்தடைகிறது. மீண்டும் சேலத்தில் இருந்து மதியம் 12:15 க்கு புறப்பட்டு மதியம் ஒரு மணிக்கு பாண்டிச்சேரி சென்றடைகிறது. பாண்டிசேரியில் இருந்து சேலத்திற்கு ரூ-1550/-கட்டணமும், சேலத்திலிருந்து பெங்களூருக்கு ரூ-1470/-கட்டணமும் பெங்களூரிலிருந்து சேலத்திற்கு ரூ-1428/- கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்திலிருந்து பாண்டிச்சேரிக்கு 45 நிமிட நேரத்திலும்,சேலத்திலிருந்து பெங்களூருக்கு 40 நிமிட நேரத்திலும் பயணிக்கலாம். ஏர் ஒடிசா நிறுவனம் 19 இருக்கைகளுடன் கூடிய பீச்-கிராப்ட் 1900 மாடல் விமானத்தை இயக்குகிறது. இதற்கான விமான டிக்கெட்டைwww.airodisha.com என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவித்தனர்.