சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் pt desk
தமிழ்நாடு

சேலம்|பாதியில் நின்ற மூதாட்டி இறுதி ஊர்வலம்.. மயானத்திற்கு நிரந்தர பாதை கேட்டு சடலத்துடன் போராட்டம்!

ஓமலூர் அருகே இறந்த மூதாட்டியின் உடலை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்து பாதையை அடைப்பதாகக் கூறி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் சமாதானம் செய்து உடலை கொண்டு சென்றனர்.

PT WEB

செய்தியாளர்: தங்கராஜூ

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் அகராதிபட்டினம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் பகுதியில் வசித்து வந்த பெரியசாமி என்பவரின் மனைவி 80 வயது மூதாட்டி ஐயம்மாள், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து இவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

இதைத் தொடர்ந்து உடலை எடுத்துச் சென்றபோது ஒரு தரப்பினர் தடை ஏற்படுத்தி விட்டதாக கூறி, போராட்டம் நடத்தியுள்ளனர். அப்பகுதி மக்கள் வழக்கமாக பயன்படுத்தி வந்த பாதையை ஒரு தரப்பினர் அவ்வப்போது தடுத்து தடை ஏற்படுத்தி வருவதாகவும், இதற்கு தீர்வு காணும் வரை உடலை எடுக்க மாட்டோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இறந்து மூதாட்டியின் உறவினர் கவுதமன் என்வரை ஒரு தரப்பினர் தாக்கியதோடு கத்தியால் கையை வெட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து காயமடைந்த இளைஞரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், பல காலமாக சென்று வரும் பாதையை ஒரு தரப்பினர் தடுப்பதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் கூறி இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கருப்பூர் போலீசாரும், வருவாய்த் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

இந்த நிலம் மற்றும் பாதை தொடர்பாக இரு தரப்பும் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இரு தரப்பையும் சமாதானம் செய்த அதிகாரிகள், உடலை அடக்கம் செய்ய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். இனிமேல் பாதையை அடைக்கக் கூடாது, ஒருவரை ஒருவர் வாக்குவாதம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்திய அதிகாரிகள் அனைவரையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.