Nandhi statue pt desk
தமிழ்நாடு

சேலம்: மேட்டூர் அணையில் புதுப்பொலிவுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் மன்னர் காலத்து நந்தி சிலை!

webteam

செய்தியாளர்: பாலகிருஷ்ணன்

சேலம் மாவட்டம் மேட்டூரில் அணை கட்டுவதற்கு முன்பாகவே அணையின் நீர் தேக்கப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்துள்ளது. இதில், குறிப்பாக பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை எதிர்ப்புற முகப்பில் நந்தி சிலையுடன் கட்டப்பட்ட ஜலகண்டேஸ்வரர் ஆலயம் இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மேட்டூரில் அணை கட்ட முடிவு செய்தனர் அப்பொழுது நீர் தேக்கு பகுதியில் வசித்து வந்த பொதுமக்களை கரையோர பகுதியில் அப்புறப்படுத்தினார்கள்.

Nandhi statue

அப்போது அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் தாங்கள் வழிபட்டு வந்த சாமி சிலைகளையும் சிற்பங்களையும் எடுத்துச் சென்றனர் ஆனால், கட்டிடங்கள் மட்டும் அப்படியே நின்று விட்டது. இந்நிலையில், கடந்த 90 ஆண்டுகளாக அணை நிரம்பும் போது தண்ணீரில் மூழ்கியும், நீர்மட்டம் 65 அடியாக சரியும் பொழுது தலை காட்டும் நந்தி சிலையை காண மாவட்டம் மட்டுமின்றி தமிழக முழுவதும் இருந்து பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பண்ணவாடி பரிசல் துறைக்கு வந்து பரிசல் மூலம் பயணித்து நந்தி சிலையை தொட்டு வணங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 46 அடியாக சரிந்ததால் நந்தி சிலை முழுவதுமாக வெளியே காட்சியளிப்பதை காண பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் நடந்து சென்று நந்தி சிலையையும் ஜலகண்டேஸ்வரர் ஆலய கோபுரத்தையும் தொட்டு வணங்கி, சிற்ப வேலைப்பாடுகளையும் காண்டு ரசித்து வருகின்றனர்.

Nandhi statue

கட்டடக் கலைக்கு உதாரணமாக 90 ஆண்டுகளாக தண்ணீரில் மூழ்கியும் நீர்மட்டம் குறையும்பொழுது வெயிலில் காய்ந்தும் இன்று வரை கம்பீரமாக காட்சியளிக்கும் ஜலகண்டேஸ்வரர் ஆலய கோபுரமும், நந்தி சிலையும் சிலரால் சிதைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஜலகண்டேஸ்வரர் ஆலய கர்ப்ப கிரக கோபுரத்தையும் நந்தி சிலையையும் எதிர்கால தலைமுறைக்கு சான்றாக விளங்க அதனை சீரமைக்க அரசும் அறநிலையத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில், பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்பட்ட நிலையில், கரையோர பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நந்தி சிலையை சுத்தம் செய்து அதற்கு வெள்ளை வர்ணம பூசியும், அணிகலன்களுக்கும் பச்சை சிகப்பு மஞ்சள் வர்ணங்களை பூசியதை அடுத்து புதுப்புலியுடன் இதுவரை யாரும் காணாத அளவிற்கு கம்பீரமாக காட்சியளிக்கும் நந்தி சிலைக்கு இளைஞர்கள் சிலர் பால் தயிர் பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து தொட்டு வணங்கி புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.