செய்தியாளர்: தங்கராஜூ
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த காமலாபுரம் ஊராட்சியின் கடைகோடி எல்லையில் கிழக்கத்திகாடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இந்த கிராமத்திற்கு அரசு மற்றும் தனியார் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள், சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சக்கரைசெட்டியப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால், அந்த வழியாக செல்வதற்கு சரபங்கா ஆற்றை கடந்தே செல்ல வேண்டும். சரபங்கா ஆற்றில் வருட கணக்கில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், அதிக மழை பொழிவின் போது இந்த சரபங்கா ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஓடுகிறது. அந்த சமயத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சரபங்கா ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவில் செல்லும் பொழுது ஆபத்தான முறையில் தண்ணீரைக் கடந்து பள்ளி குழந்தைகள் செல்கின்றனர். அப்படி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை காலை மாலை என இரு வேளையும் பெற்றோர்கள் காத்திருந்து அழைத்து வருகின்றனர். இதனால், வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
சரபங்கா ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். நீண்டநாள் கோரிக்கையை அரசு ஏற்று பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.