சந்திரயான் 2 விண்கலத்தை அனுப்பும் மார்க் 3 ராக்கெட் எஞ்சின் தயாரிப்பிற்கு சேலம் உருக்காலையின் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகளிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து அதிகாலை 2.51 மணிக்கு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட இருந்தது. 978 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை, பாகுபலி என வர்ணிக்கப்படும் மார்க்-3 ராக்கெட் மூலம் ஏவுவதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.
சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதற்கு 56 நிமிடங்கள் 24 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில், அதாவது அதிகாலை 1.55 மணியளவில் கவுன்ட் டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. மார்க் 3 ராக்கெட்டில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறு கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேறொரு நாளில் சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும் என தெரிவித்துள்ள இஸ்ரோ, ஏவப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில் சந்திரயான் 2 விண்கலத்தை ஏவுவதற்கு தயாரிக்கப்பட்ட மார்க் 3 ராக்கெட்டுக்கு, சேலம் உருக்காலையில் இருந்து தயாரிக்கப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. சந்திரயான் விண்கலத்திற்கான கிரையொஜெனிக் ராக்கெட் இன்ஜின் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் ரஷ்ய தர ‘ICSS-1218-321’ ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சேலம் உருக்காலையில் இருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரோ, சேலம் உருக்காலையுடன் இணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக்கியள்ளது. இந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீலானது 2.3 மி.மீ and 0.6 மி.மீ தடிமன் கொண்டதாக அமைந்துள்ளது. கிரையொஜெனிக் இன்ஜின் மட்டுமில்லாமல் வேறு சில இன்ஜின் தயாரிப்பிற்கும் இஸ்ரோ, சேலம் உருக்காலையை பயன்படுத்தும் எனத் தெரிகிறது.
முன்னதாக சந்திரயான்- 2 விண்கலத்தில் பயணிக்கும் லேண்டர், ரோவர் ஆகிய உபகரணங்களை, நாமக்கல்லில் உள்ள குன்னமலை கிராமத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அனார்தசைட் மண் மாதிரியில் இயக்கி இஸ்ரோ சோதித்து பார்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.