தமிழ்நாடு

சேலம் உருக்காலை விவகாரம் : மத்திய அமைச்சர் தகவல்

சேலம் உருக்காலை விவகாரம் : மத்திய அமைச்சர் தகவல்

webteam

பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலையின் நஷ்டத்தை ஈடு செய்ய ஆலை ஊழியர்களுடன் மத்திய எஃகுத்துறை அமைச்சர் செளத்ரி பிரேந்தர் சிங் ஆலோசனை நடத்தினார்.

1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சேலம் உருக்காலையில் உலகத்தரம் வாய்ந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உற்பத்தி செய்யப்படுகிறது. சேலம் உருக்காலை வெறும் பொதுத் துறை நிறுவனம் மட்டும் அல்ல, அது தமிழகத்தின் சொத்து என்றே சொல்லலாம். சர்வதேச அளவில் சிறப்பான இடத்தை பெற்ற சேலம் உருக்காலையின் 'ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்' 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் ரயில்வே துறை, அணுமின் நிலையம், விண்வெளி ஆராய்ச்சி மையம், நாணயங்கள் உற்பத்தி போன்ற பல தொழில்சாலைக்கு சேலம் உருக்கு ஆலையின் பங்கு அதிகம். இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பாக செயல்படும் சேலம் உருக்காலை நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் 2 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாகக்கூறி அதனை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டியது. 

இந்நிலையில் சேலம் உருக்காலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு செயல் நிர்வாக தலைவராக பொறுப்பேற்ற அனில்குமார் சௌத்ரி, ‌தொழிற்சாலையின் அனைத்துப்பிரிவிலும் ஆய்வு செய்தார். இதனைதொடர்ந்து மத்திய எஃகுத்துறை அமைச்சர் செளத்ரி பிரேந்தர் சிங் நேரில் ஆய்வு செய்தார்.உருக்காலையில் ஆய்வு செய்த பின் பேசிய அவர், அடுத்த ஓராண்டில் சேலம் உருக்காலை நஷ்டத்தை ஈடு செய்ய ஊழியர்கள் ஆலோசனை வழங்கியதாக தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனமான சேலம் உருக்காலை நட்டம் காரணமாக தனியார் மயமாக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது. இது உருக்காலை ஊழியர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் சேலம் உருக்காலையின் பெருமையும், சிறப்பும் மீண்டும் உறுதிபடுத்தப்படும் என்று நம்புகிறேன். இதுதான் உள்ளூர்மக்களின் விருப்பமாகவும் இருக்கிறது என்று கூறினார். 

மேலும், தமிழக அரசு சார்பில் கடந்த மாதம் 19 ஆம் தேதி சேலம் உருக்காலைக்காக வழங்கப்பட்ட 215 கோடி ரூபாய் கடனுதவி, ஆலையை நஷ்டத்திலிருந்து மீட்டெடுக்க பேருதவியாக இருந்ததாக கூட்டமைப்பினர் கூறுகின்றனர். உலகமயமாக்கல் கொள்கையால் ஸ்டெயின்லஸ் ஸ்டீல் மொத்த உற்பத்தியில் சீனா மட்டுமே 52 விழுக்காட்டை ஆக்கிரமித்துள்ளது. மற்ற நாடுகளின் மொத்த உற்பத்தி 48 விழுக்காடு மட்டுமே.

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உற்பத்தியை அதிகரிப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உருக்காலை தொழிலாளர்கள் கூறுகின்றனர். இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை 'ரத்தினங்கள்' என்று வர்ணித்து உள்ளனர். அதில் சேலம் உருக்காலையும் ஒன்று என்று உருக்காலை தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.