சேலத்தில் காவல் துறையினரை தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி பிரமுகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சேலம் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிவோர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக காவல் துறையினர் தொடர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கொண்டலாம்பட்டி ரவுண்டானா வழியாக வந்த வாலிபர் ஒருவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அவரிடம் விசாரித்தபோது, சரியாக பதிலளிக்காததாலும் வெளியே சுற்றவதற்காக எந்த ஆவணமும் அவரிடம் இல்லாததான் அவருக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதைத் தெரிந்து கொண்டு அவரது நண்பரான சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் செல்லபாண்டியன் மற்றும் அவரது நண்பர் தமிழரசன் ஆகிய இருவரும் நேற்று மாலை கொண்டலாம்பட்டிக்கு வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்த காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்து முன்னணி பிரமுகர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர், இந்து முன்னணி அமைப்பில் இருந்து அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.