சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் பணியில் இருக்கும்போதே பூட்டர் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி, பெரியார் பல்கலைக்கழகம் மூலம் ஒப்பந்தம் செய்து முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து கடந்த மாதம் 26 ஆம் தேதி துணைவேந்தர், பதிவாளர் மற்றும் இரண்டு பேராசிரியர்கள் உட்பட நான்கு பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த கருப்பூர் போலீசார், துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மற்றவர்களான பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில், பெரியார் பல்கலைக் கழகத்தில் ஆய்வுக் குழு கூட்டம் நடத்துவதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று பல்கலைக் கழகத்திற்கு வந்தார். இதற்கு பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம், கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், திமுக மாணவர் அணி, திராவிட மாணவ கழகம், I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் மற்றும் மாணவர் அணியினர் எதிர்ப்பு தெரிவித்தன.
தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகம் முன்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்து, போராட்டம் நடத்தினர். ஆளுநருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதனால், பெரியார் பல்கலைக்கழக பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், ஆளுநர் பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட 178 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதையடுத்து நேற்று மாலை விடுவிக்கப்பட்ட 178 பேர் மீதும் கருப்பூர் போலீசார் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.