salem modern theatre land issue PT
தமிழ்நாடு

மாடர்ன் தியேட்டர்ஸ் நில உரிமையாளர் புகார்; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் எ.வ.வேலு!

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் இடத்தின் தற்போதைய உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் தன்னை மிரட்டுவதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

PT WEB

சேலத்தில் சிறப்புமிக்க மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவு வளைவு பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குச் சிலை வைப்பதற்காக தங்களுக்குப் பல நெருக்கடிகள் கொடுக்கப்படுவதாக அந்த இடத்தின் தற்போதைய உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் நுழைவு வாயிலாகப் போற்றப்படும் மாடர்ன் தியேட்டர்ஸ் மூடப்பட்ட பிறகு அந்த சொத்துகள் விற்பனை செய்யப்பட்டன. அந்த இடத்தை சேலத்தைச் சேர்ந்த ரவிவர்மா என்பவருக்குச் சொந்தமான வர்மா கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் வீட்டுமனைகளாகப் பிரித்து விற்பனை செய்தன. மாடர்ன் தியேட்டர்ஸ் பெருமையைப் பறைசாற்றும் அந்த நுழைவு வளைவு தற்போது வரை அப்படியே பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கடந்த பிப்ரவரி மாதம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முதல்வர் ஸடாலின் அந்த வளைவு முன்பாக செல்பி எடுத்துக் கொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மாடர்ன் தியேட்டர் வளைவு தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த வளைவு அமைந்திருக்கும் இடத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குச் சிலை அமைக்க இடம் ஒதுக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டதாக அந்த இடத்தின் தற்போதைய உரிமையாளரான விஜயவர்மா கூறியுள்ளார்.

இது தொடர்பாக தாங்கள் முடிவு ஏதும் சொல்லாததால் சேலம் மாவட்ட ஆட்சியர் தங்களை அழைத்து மிரட்டியதாகவும் பகிரங்க குற்றச்சாட்டை வைத்திருந்தார் விஜயவர்மா. இந்த விவகாரத்தில் மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென நிலத்தை அளவீடு செய்து அந்த இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது எனவும், இந்தப் பிரச்சனையால் தங்கள் குடும்பத்தினர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எ.வ. வேலு

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "அஸ்தம்பட்டியில் இருந்து ஏற்காடு அடிவாரம் வரை செல்லும் சாலை அகலப்படுத்துவதற்கான முதற்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட பணிகளுக்கு நிலத்தை அளவீடு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவு அமைந்துள்ள இடமும் அளவீடு செய்யப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி நெடுஞ்சாலைத் துறையினர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். சாலை அகலப்படுத்தப்பட்டாலும் பெருமைமிக்க மாடர்ன் தியேட்டர்ஸ் அடையாளச் சின்னம் எந்த பாதிப்பும் இன்றி பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தற்போதைய உரிமையாளர்

இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளார். அந்த அறிக்கையில், "மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத்துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பழமையான இந்த முகப்பைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம். இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடம் தவிர, வேறு இடத்தைக் கேட்டு அரசுத்தரப்பில்  நிர்ப்பந்திப்பதாக வெளிவரக்கூடிய தகவல்கள் அனைத்தும் தவறானவை என தெளிவுபடுத்தப்படுகிறது" என்றார்.