தமிழ்நாடு

சேலம் சுவாரஸ்யம்: சோசலிசத்தை கரம்பிடித்த மம்தா பேனர்ஜி

சேலம் சுவாரஸ்யம்: சோசலிசத்தை கரம்பிடித்த மம்தா பேனர்ஜி

kaleelrahman

சேலத்தில் சோசலிசத்துக்கும் மம்தா பேனர்ஜிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த செய்தியை விரிவாக காணலாம்.

மணமகன் சோசலிசம்; மணமகள் மம்தா பேனர்ஜி; தங்கள் நல்வரவை எதிர்பார்க்கும் கம்யூனிசம், லெனினிசம், மார்க்சிசம்.
இப்படி ஒரு திருமண அழைப்பிதழ் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளுக்குட்பட்டு சேலம் கொண்டலாம்பட்டியை அடுத்த காட்டூர் பகுதியில் எளிமையாக நிகழ்ந்தது சோசலிசத்துடன் - மம்தாபேனர்ஜி கரம் கோர்த்த நிகழ்வு.

பாரம்பரிய கம்யூனிஸ்ட் குடும்பத்தை சேர்ந்தவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளருமான மோகன் கட்சிக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த காரணத்தால் தங்கள் மகன்களுக்கு கம்யூனிசம், லெனினிசம், மார்க்சிசம், சோசலிசம் என்று வித்தியாசமாக கொள்கை ரீதியான பெயர்களை வைத்துள்ளார்.

இவரது உறவினர் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு மம்தா பேனர்ஜி என்ற பெயர் வைக்கப்பட்டது.  அரசியலில் மம்தா - சோசலிசம் என்றாலே முரண்பட்ட கருத்துகளே முன்நிற்கும். மாறாக முறைப்பெண் மம்தா பேனர்ஜியை கடந்த மூன்று ஆண்டுகளாக நேசித்த சோசிலிசம் பெற்றோர் சம்மதத்துடன் இன்று கரம்பிடித்துள்ளார்.

மம்தா பேனர்ஜி என்ற பெயர் ஆரம்பத்தில் தனக்கு ஒரு நெருடலை ஏற்படுத்தியாதாக கூறும் மணப்பெண் தற்போது பெருமையாக உள்ளது என பெருமிதம் கொண்டார். அரசியலில் முரண்பட்ட கொள்கை கொண்ட பெயர்கள் என்றாலும் இல்லற வாழ்வில் ஓர் எடுத்துக்காட்டாய் திகழ்வோம் என்கிறார் சோசலிசம்.

பெயரால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இந்த இளம்ஜோடிக்கு பலதரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

- மோகன் ராஜ்