ஐபிஎஸ் தேர்வில் வெற்றி - லாரி ஓட்டுநரின் மகன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சேலம்: “எல்லோரும் பாராட்டுவது சந்தோஷமா இருக்கு” - ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற லாரி ஓட்டுநரின் மகன்!

“எனது கணவர் கஷ்டப்பட்டு என் மகனை படிக்க வைத்து ஐ.பி.எஸ்., ஆக்கியுள்ளார்” - லாரி ஓட்டுநரின் மகன் ஐ.பி.எஸ்., தேர்வானது குறித்து தாய் கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.

PT WEB

செய்தியாளர்: ஆர்.ரவி

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஏத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அறிவழகன் - கலைவாணி தம்பதியர். லாரி ஓட்டுநரான அறிவழகன் தற்போது முத்து மலை முருகன் கோயிலில் காசாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு கார்த்திகேயன், விக்னேஸ்வரன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகனான கார்த்திகேயன் சிறுவயது முதலே ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு படித்து வந்துள்ளார்.

அறிவழகன் - கலைவாணி தம்பதியின் வீடு

ஆனால், குடும்ப சூழல் காரணமாக ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அப்போது தனியார் பயிற்சி மையத்தில் (சைதை துரைசாமி மனிதநேய மையம்) பயின்று தென்னக ரயில்வேயில் மதுரை கோட்ட ஆணையாளராக தற்போது பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஐபிஎஸ் தேர்வெழுதிய அவர், அதில் தேர்வாகியுள்ளார். அவருக்கு நித்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இதுகுறித்து ஐபிஎஸ் ஆக தேர்வாகியுள்ள கார்த்திகேயனின் தந்தை அறிவழகன் கூறும்போது...

“லாரி ஓட்டுனரான எனக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் படிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தொடர்ந்து முயற்சி செய்து கார்த்திகேயன் வெற்றி பெற்றுள்ளார். இது அவருடைய திறமை. அவர் ஐபிஎஸ்-ஆக தேர்வானது பேரூராட்சி பகுதியான எங்கள் பகுதிக்கு மட்டுமல்ல, எங்கள் மாவட்டத்திற்கே பெருமையாக உள்ளது. என் இளைய மகன் விக்னேஷ், தனது அண்ணன் படிக்க வேண்டும் என அவரும் சம்பாதித்து செலவு செய்து அண்ணனை படிக்க வைத்துள்ளார். இது எங்களுக்கு பெருமையாக உள்ளது” என்றார்.

தந்தை அறிவழகன், தாய் கலைவாணி

தாய் கலைவாணி கூறும்போது...

“எனது மகன் தேர்வானது சந்தோஷமாக உள்ளது. எனது கணவர் லாரி ஓட்டுனராக இருந்த போதும் எனது மகன்கள் எந்த விதத்திலும் எனக்கு தொந்தரவு கொடுத்தது கிடையாது. அதேபோல் படிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டதால் அதிக நண்பர்களோடு அவர்கள் பேசியது கிடையாது. வீட்டில் டிவி பார்ப்பதும் கூட கிடையாது. எனது உறவினர்கள் உட்பட அனைவருக்கும் இது பெருமையாக உள்ளது. என் மகனை பற்றி பேசும் பொழுது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது” என ஆனந்த கண்ணீரோடு தெரிவித்தார்.