சேலத்தில் கடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்த இளம்பெண் இளமதி காவல்நிலையத்தில் ஆஜரானார்.
சேலம் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணான இளமதி, கடத்தப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அவரை திருமணம் செய்துகொண்ட செல்வன் என்பவர் தாக்கப்பட்டு இளமதி காரில் கொண்டு செல்லப்பட்ட சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் இளமதி கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், #இளமதி_எங்கே என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் இளமதி, சேலம் மேட்டூர் காவல்நிலையத்தில் ஆஜரானார். வழக்கறிஞர் சரவணன் என்பவருடன் அப்பெண் ஆஜராகியுள்ளார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த செல்வன், இளமதி ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும்போது காதலித்தனர். இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும், திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். திராவிட விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த செல்வன், அந்த இயக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினரான ஈஸ்வரன் உதவியோடு சில நாட்களுக்கு முன்னர் இளமதியை திருமணம் செய்து கொண்டார்.
அன்று இரவே கார்கள் மற்றும் பைக்குகளில் வந்த சுமார் 40 பேர் கொண்ட கும்பல் திருமணம் செய்து வைத்த ஈஸ்வரனை தாக்கி காரில் ஏற்றிச் சென்றனர். மேலும் புதுமாப்பிள்ளையை தாக்கிவிட்டு மணமகள் இளமதியையும் கடத்திச் சென்றனர். இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. பின்னர் காவல்துறையினர் தங்களுக்கு வந்த புகாரை தொடர்ந்து, மணமகன் செல்வன் மற்றும் ஈஸ்வரன் இருவரையும் மீட்டனர். மேலும் மணமகன் செல்வன் கொடுத்த புகாரின் பேரில் 50 பேர் மீது கொளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.