தமிழ்நாடு

சேலம்: மாலை நேர விமான சேவை மே மாதம் முதல் தொடங்கும் - விமான நிலைய இயக்குநர்

சேலம்: மாலை நேர விமான சேவை மே மாதம் முதல் தொடங்கும் - விமான நிலைய இயக்குநர்

kaleelrahman

சேலத்தில் இருந்து சென்னைக்கு மாலை நேரத்தில் விமான சேவை விரைவில் துவங்கப்படுகிறது. இரவு நேரத்தில் விமானங்களை இயக்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.

சேலம் - சென்னை பயணிகள் விமான சேவை தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் சேலம் சென்னை மற்றும் இதர பகுதிகளுக்கான விமான போக்குவரத்து சேவையை துவங்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், சேலம் விமான நிலைய இயக்குநர் ரவீந்திரசர்மா செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது... சேலத்தில் இருந்து சென்னைக்கு காலை நேரத்தில் விமான சேவை ட்ரூஜெட் நிறுவனம் சார்பில் நடைபெற்று வருகிறது. இதே நிறுவனம் மாலை நேரத்திலும் விமான சேவையை தொடங்க முன்வந்துள்ளது.

மாலை நேர விமான சேவை வரும் மே மாதம் முதல் தொடங்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். சேலம் விமான நிலையத்தில் தற்போது இரண்டு விமானங்களை நிறுத்தும் வசதி உள்ளது. விமான நிலையம் விரிவாக்கம் செய்தால் மேலும் இரண்டு விமானங்கள் என நான்கு விமானங்களை நிறுத்த முடியும்.

இரவு நேரத்தில் விமானங்களை இயக்குவதற்கான உள் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளன. சேலம் விமான நிலையத்தில் தற்போது அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் வந்து செல்வதால் பாதுகாப்பை பலப்படுத்துமாறு காவல்துறையிடம் தெரிவித்துள்ளோம்.

வரும் காலங்களில் வேறு சில நிறுவனங்களும் விமான சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், சேலம் விமான நிலையம் விரைவில் முக்கிய மையமாக தமிழக அளவில் மாறும் என்றார்.