தமிழ்நாடு

மேட்டூர் அணையிலிருந்து இரவு முதல் 30,000 கனஅடி நீர் திறப்பு - ஆட்சியர் எச்சரிக்கை

மேட்டூர் அணையிலிருந்து இரவு முதல் 30,000 கனஅடி நீர் திறப்பு - ஆட்சியர் எச்சரிக்கை

webteam

மேட்டூர் அணையிலிருந்து இன்று இரவு 8 மணி முதல் விவசாயத்திற்காக 30,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியை தாண்டி வேகமாக உயர்ந்து வருகிறது. கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் காவிரி ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது கர்நாடகா அணைகளில் இருந்து காவிரி ஆற்றின் மூலம் 61 ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துகொண்டுள்ளது. இதனால் 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் 117 அடியை தாண்டி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு தற்போது வருகிறது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் நீர்மட்டம் 120 அடியை எட்டியதும், மொத்த நீரும் உபரிநீராக திறந்துவிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று 8 மணி முதல் மேட்டூர் அணியிலிருந்து வினாடிக்கு 30,000 கனஅடி நீர் விவசாயத்திற்காக திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கரையோர கிராமங்களை கொண்ட அனைத்து மாவட்ட ஆட்சிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், சேலத்தில் உள்ள கரையோர கிரமாங்களான 21 வருவாய் ஊர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.