காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுவனுக்கு சேலம் அரசு மருத்துவமனை முறையான சிகிச்சை அளிக்காததால் கோமா நிலைக்கு சென்றதாக மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த மணிவண்ணன் - மைதிலி தம்பதியின் 5 வயது மகன் ஹரிகுகன், கடந்த செப்டம்பர் மாதம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிறுவனுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால், மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர் பெங்களூருவுக்கு சென்று சிறுவனை காப்பாற்றியதாகவும் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
தற்போது சிறுவன் ஹரிகுகன் கோமா நிலையில் இருப்பதாகவும், மகனை காப்பாற்ற மேற்கொண்டு செலவு செய்ய வசதியில்லை எனவும் பெற்றோர் தெரிவித்தனர். இந்நிலையில், மகன் கோமா நிலைக்கு செல்ல காரணமான சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளிக்க சிறுவனுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெற்றோர் வந்தனர். அங்கு ஆட்சியரை சந்தித்து மனு அளித்த அவர்கள், சிறுவனை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.