டிஜிபி விசாரணைக்கு உத்தரவு pt desk
தமிழ்நாடு

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக சக காவலர்கள் மீது புகார் - டிஜிபி விசாரணைக்கு உத்தரவு

சேலம் மாநகர காவல்துறை குடியிருப்பில் பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை. கொடுத்ததாக, டிஜிபிக்கு புகார் சென்றதையடுத்து சக காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

webteam

செய்தியாளர்: மோகன்ராஜ்

சேலம் லைன்மேடு பகுதியில் மாநகர காவல் துறையினருக்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் மாநகர காவல் துறையில் பணியாற்றும் காவலர்கள், மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த குடியிருப்பில் வசித்து வரும் பெண் காவலர்கள் சிலர் டிஜிபி அலுவலகத்திற்கு புகார் ஒன்று அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆணையர் பிரவீன்குமார் அபினபு

அந்தப் புகாரில், “நாங்கள் வசிக்கும் குடியிருப்பில் எதிர் வீட்டில் வசிக்கும் காவலர் ஒருவர் தனது காவல்துறை நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு அரைகுறை ஆடைகளுடன் வலம் வருகின்றார். அவரின் நண்பர்களும் அப்படியே உள்ளனர். நள்ளிரவு நேரங்களில் எங்களது வீட்டின் கதவை தட்டுவதோடு, ஆபாச வார்த்தைகளால் பேசி, பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதுமாக அனைவரும் உள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்த டிஜிபி அலுவலகத்தில் இருந்து சேலம் மாநகர காவல் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாநகர காவல் துறை ஆணையர் பிரவீன்குமார் அபினபு உத்தரவு பேரில் இப்புகாரின் மீது விசாரணை நடத்த துணை ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.