தமிழ்நாடு

விதிமுறை மீறி கருக்கலைப்பு செய்தால் கடும் நடவடிக்கை - சேலம் ஆட்சியர்

webteam

சேலத்தில் விதிமுறைகளை மீறி கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோஹிணி எச்சரித்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதிநகர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் விதிகளை மீறி கருக்கலைப்பு செய்யப்படுவதாக புகார்கள் வந்த நிலையில், அங்கு சுகாதாரத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கூற 6 ஆயிரம் ரூபாயும், பெண் குழந்தை என்றால் அதனை கருக்கலைப்பு செய்ய 30 ஆயிரம் ரூபாயும் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து மருத்துவ ஊழல் தடுப்புபிரிவினர் பரிந்துரையின் பேரில், ஆத்தூர் காவல்துறையினர் மருத்துவமனை உரிமையாளர் தமயந்தியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மருத்துவர் தமயந்தி தலைவாசல் வட்டார ஆரம்ப சுகாதாரநிலையத்தில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்தவர். இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் மருத்துவர்களையும், மருத்துவ மையங்களையும் கண்டறிய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்துள்ளார். அத்துடன் விதிமுறை மீறி கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.