ஒப்பனை தரித்து மேடையேறி நாடகத்தில் நடித்த அதிமுக எம்எல்ஏ, அரசின் திட்டங்களை அடுக்கடுக்காக பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது.
வேடர்குலத் தலைவன் நம்பிராஜன் வேடமிட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் இவர் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சக்திவேல். நாடகக் கலைஞரான இவர், சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தின் பொருளாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், உலக நாடக தினத்தையொட்டி தமிழக கலை பண்பாட்டுத்துறை மற்றும் சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கம் ஆகியவை இணைந்து வள்ளி திருமணம் எனும் நாடகத்தை சேலத்தில் நடத்தினர். இந்த நாடகத்தில் வள்ளியின் தந்தை நம்பிராஜன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார் சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல்.
கதையின் அறிமுகக் காட்சியில் முருகனை வணங்கிய நம்பிராஜன் பேசுகையில், "முருகன் அருளால் நாடு செழிப்பாக இருக்கிறது. குறிப்பாக மக்கள் நன்மை கருதி ஏரி குளங்களை தூர்வாரி குடிமராமத்து பணிகள், கிராம மக்களுக்கு மருத்துவ வசதி கிடைத்திட 2000 மருத்துவ மையங்கள், மக்கள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு என எனது அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது" என தமிழக அரசு செய்துவரும் திட்டங்களை அடுக்கடுக்காக பட்டியலிட்டார்.
அரிதாரம் பூசி அலங்காரம் புனைந்து நம்பிராஜன் கதாபாத்திரத்தை ஏற்று மேடையேறிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தனது அறிமுக காட்சியில் கதாபாத்திரத்தோடு அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கி, தமிழக முதல்வருக்கு தனது விசுவாசத்தை காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.